அரசுப் பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டு, மாணவர் சேர்க்கையை அதிகரியுங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 46-ஐ மூடத் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 46 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மூட முனைப்பு காட்டும் அரசு, அப்பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேரவில்லை என்பதை ஆராயத் தவறியது வருத்தம் அளிக்கிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் புதியதாகத் தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க, 25% இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களைச் சேர்த்துவிடுவது மட்டுமின்றி 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கட்டணமும் வழங்கி வருவது வேதனையளிக்கிறது.

இதுபோன்று ஆண்டுக்கு 1,21,000 மாணவர்களை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்றுகூறி பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுவது ஏற்புடையது அல்ல. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் அனாதையாகி விடுவதோடு மூடப்படும் அபாயமும் ஏற்படும்.

ஆகையால் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டுவிட்டு, போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்