குளிக்க, பல் துலக்க, பாத்திரம் கழுவ, தரை துடைக்க சோற்றுக் கற்றாழை!- சூழல் ஆர்வலரின் வெற்றிகர முயற்சி

By க.சே.ரமணி பிரபா தேவி

மாற்றத்துக்கான வாசல் எக்காலத்திலும் திறந்தே இருக்கிறது - நம்மாழ்வார்

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சோப், ஷாம்புகள், கண்டிஷனர்கள், டிடர்ஜெண்டுகள் ஆகியவை உபயோகித்த பிறகு என்ன ஆகின்றன என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறோமா?

ஆசிட்களும் வேதிப்பொருட்களும் நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரையும் மண்ணையும் பாழாக்குவது குறித்து எண்ணிப் பார்த்திருக்கிறோமா? மண் மீதும் இயற்கை மீதும் அக்கறை இருந்தாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் கெமிக்கல்களுக்கு மாற்று குறித்து பெரும்பாலானோர் யோசித்திருக்க மாட்டோம். ஆனால் அதற்கான மாற்றுப் பொருளை, நண்பர் மூலம் கண்டறிந்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் ராஜூ மாரியப்பன்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய அவர், ''சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் இயல்வாகை நடத்திய நம்ம ஊரு சந்தை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதுல பேசின சண்முகம் ராமசாமி என்பவர், 3 வருஷமா குளிக்கறதே இல்லைன்னு சொன்னார். விரிவாப் பேசும்போது வேதிப்பொருட்கள் சேர்த்து குளிக்கறதில்லைன்னு அவர் சொல்ல வந்தது புரிஞ்சது. அந்தச் சந்திப்பில் சோற்றுக் கற்றாழை பத்தியும் அதோட பயன்கள் குறித்தும் பேசினார். அவரோட வழிகாட்டுதல்ல, வீட்டுல கத்தாழையைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

வீட்டுல இடமிருந்தா நிலத்துலயும், இல்லைன்னா தொட்டிலயும் கத்தாழையை வளர்க்கலாம். பெருசா மெனக்கெடாம, தானாவே வளரும். மொதல்ல கத்தாழையைப் பயன்படுத்தி குளிக்கறது எப்படின்னு சொல்றேன். கத்தாழை ஓரத்துல இருக்கற முட்களை மொதல்ல செதுக்கிடணும். தோலை நீக்கிட்டு உள்ள இருக்கும் ஜெல்லை மட்டும் தனியா எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனா நான் தோலை நீக்காம, கீறிவிட்டு அப்படியே கத்தாழையைத் தேய்த்துக் குளிக்கிறேன். 

உடம்புக்கும் தலைக்கும் இதையே ப்ரஷ் மாதிரி பயன்படுத்தறேன். கத்தாழை வறண்ட மாதிரி தெரியும்போது கையாலயே கீறிக் கீறி மறுபடியும் பயன்படுத்தலாம்.
விரிவாக அறிய: வீடியோ 

பாத்திரம் கழுவ, தரை துடைக்க

ஒரு கிண்ணத்துல கத்தாழை ஜெல்லை எடுத்துக்கணும். அதில் கொஞ்சமா தண்ணீர் விட்டு பாத்திரங்களைத் தேய்க்கலாம். எண்ணெய்ப் பிசுக்கு அதிகமாக இருக்கற பாத்திரங்களை தண்ணீர் விடாத கத்தாழை ஜெல் மூலமா சுத்தப்படுத்தினா, பளிச்சுன்னு ஆகிடுது. வீட்டுத் தரையைத் துடைக்க ஒரு பக்கெட் தண்ணீர்ல, கொஞ்சமா ஜெல்லைப்  போட்டு கலந்து, அதை எடுத்துத் துடைச்சுக்கறோம். பல் விளக்கவும் கத்தாழையப் பயன்படுத்தலாம். சிறு மிட்டாய் அளவுக்கு வாயில் போட்டு மென்றோ இல்லைன்னா விரலால் கீறி பிரஷில் பேஸ்ட் போல தடவியோ பயன்படுத்தலாம்'' என்று புன்னகைக்கிறார் ராஜூ மாரியப்பன்.

சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ''எனக்குக் கிடைச்ச பலனைப் பார்த்து இப்போ வீட்ல எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. நம்மோடது ஆயில் சருமமா இருந்தாலும் வறண்ட சருமமா இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். ஒரு மடலை எடுத்து, ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்துவேன். எந்த பக்க விளைவும் ஏற்படாது. நம் தோல், குழந்தையின் சருமம் மாதிரி மிருதுவாகிடும். அழகு நிலையங்கள்ல இதனாலதான் ஆலோவேரா ஃபேஷியல்னு சொல்லி ஆயிரக்கணக்குல வாங்கறாங்க.

கெமிக்கல் இல்லாத தண்ணீங்கறதால டைல்ஸுக்கு ஒண்ணும் ஆகாது. தரைகளும் வெளுத்துப் போகாம மின்னும். செப்டிங் டேங்க்கும் ரொம்ப நாள் அப்படியே இருக்கும். குளிர்ச்சிங்கறதால வயித்து வலி, மாதாந்திர பிரச்சினைகளுக்கும் கத்தாழை, நிவாரணியா இருக்கு. தொடர்ந்து சாப்பிட்ட என் மனைவிக்கு வலி சரியாகிடுச்சு. கத்தாழையோட கசப்பு விஷத்தன்மை கொண்டது. அதனால கசப்புத்தன்மை போற வரை நல்லா, தேய்ச்சுக் கழுவணும்'' என்று சொல்கிறார் ராஜூ மாரியப்பன். 

வெற்றிகரமான கற்றாழைப் பயன்பாடு குறித்து மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டு முடிப்பதற்குள், ''சோப்பு, ஷாம்பு ரசாயனங்களை விட்டு விலகி ரொம்ப நாள் ஆச்சு. அதன் தொடர்ச்சியா சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கிறதால உருவாகிற வறட்சியைப் போக்குறதுக்காக நம்ம தலைல கட்டப்படுற கண்டிஷனர், மாய்ஸ்சரைசர் ரசாயனங்களில் இருந்தும் தப்பிச்சாச்சு. அதுமட்டுமில்ல, அதையெல்லாம் அடைக்கிறதுக்காகத் தேவைப்படுற பாலித்தீன், பிளாஸ்டிக்ல இருந்தும் விடுதலை.

இந்த ரசாயனங்களுக்காக மளிகை பட்ஜெட்ல ஆகிக்கிட்டு இருந்த செலவும் இப்ப இல்ல. நம்ம வீட்ல தண்ணீர் செலவும் ரொம்பக் குறைஞ்சிருக்குது. அப்படிப் பயன்படுத்தி முடிச்ச தண்ணியும், முழுக்க முழுக்க எந்தவிதமான செயற்கை ரசாயனங்களும் இல்லாததா நிலத்துக்குப் போகுது. அந்த வகையில் எங்கள் வீதிலயே ரசாயனக் கழிவுகளை வெளியேத்தாத முதல் வீடா, நம்ம வீடு உருவாகியிருக்கு'' என்று பெருமிதப் புன்னகையோடு முடிக்கிறார் ராஜூ மாரியப்பன்.

தொடர்புக்கு: ராஜூ மாரியப்பன் - 9894332717 (வாட்ஸ் அப்)

வேதிப்பொருட்களை விடுத்து கற்றாழைக்கு மாறுவதால் செலவும் குறைவு; சூழலுக்கும் நிறைவு. நாமும் இயற்கையோடு இணைந்து வாழ முயற்சிப்போம். 

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்