Published : 03 Jan 2018 02:46 PM
Last Updated : 03 Jan 2018 02:46 PM

நம்ம ஊரு சந்தை- திருப்பூரில் மதியத்துக்குள் விற்றுத் தீர்க்கும் நேரடி இயற்கை விற்பனை மையம்

மாறுதலுக்கான வாசல் எக்காலத்திலும் திறந்தே இருக்கிறது - நம்மாழ்வார்

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் 'நம்ம ஊரு சந்தை' என்ற பெயரில் திருப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வேளாண் பொருட்களோடு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் இங்கே உள்ளன. திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'இயல்வாகை' என்ற அமைப்பினரால் இந்த சந்தை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இயல்வாகை அமைப்பைச் சேர்ந்த அழகேஸ்வரி, ''இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்டதே 'இயல்வாகை'. சூழலியல் சார்பாகத் தொடர்ந்து இயங்குவதும், குழந்தைகளிடம் நாடகம், பொம்மை, பாட்டு என கலை வடிவங்களில் இயற்கையைக் கொண்டு சேர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.

இதன் நீட்சியாக சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் நுகர்வோர்களையும் ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டதே 'நம்ம ஊரு சந்தை'. நல்ல வாழ்வியலுக்கான, சமூக மாற்றத்துக்கான தொடக்கமாக இது இருக்கும்.

உழவர்களுக்கான நேரடி விற்பனை மையமாக எங்கள் சந்தை செயல்படுகிறது. முன்னரெல்லாம் விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் சொல்லும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கான விலையை அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. அதனால் இங்கு உற்பத்தியாளர்களுக்கு விற்பனையில் முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இதனால் பொருளாதார சுழற்சி சீராகும் என்று நம்புகிறோம்.

சென்ற தலைமுறை வீடு, படிப்பு, வேலைக்கு அளித்த முக்கியத்துவத்தை உணவுக்கு அளிக்கவில்லை. ஆனால் இப்போது மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. இன்றைய தலைமுறையினர் தன் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்கவே விருப்பப்படுகின்றனர்.

எனவே இயற்கை விளைபொருட்களுக்கு மெல்ல மெல்லப் பழகிய மக்கள், இனி வருங்காலத்தில் ரசாயனப் பொருட்களை வாங்க யோசிப்பார்கள். அவர்களால் உற்பத்தியாளர்களை நிர்பந்திக்கும் கட்டாயம் ஏற்படும். அதுவே நல்ல, ஆரோக்கியமான பொருட்களை உருவாக்கும்.

பிளாஸ்டிக் இல்லை

'நம்ம ஊரு சந்தை'யில் பேக் செய்யப்பட்ட பிராண்டட் பொருட்கள் கிடையாது. பாலித்தீன், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லை. பொருட்கள் வாங்க வருபவர்கள் பாத்திரம், தூக்குவாளி, கட்டைப்பை, துணிப்பைகளைக் கொண்டு வந்து வாங்குகின்றனர்.

சிறுதானிய உணவுகள், முடவாட்டுக்கால், கரிசலாங்கனி, பாலக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை உள்ளிட்ட சூப் வகைகள், நவதானிய சுண்டல், ஆவாரை, அரசு, அத்தி ஆகியவற்றில் தேநீர், மாங்கொட்டை காபி ஆகியவை இந்த சந்தையின் ஸ்பெஷல்.

விற்பனைக்கு...

பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், வெங்காயம், தக்காளி உட்பட அனைத்து நாட்டுக் காய்கறிகள், கருப்பட்டி, தேன், கற்றாழை ஊறுகாய், வேப்பம்பூ ஊறுகாய், கீரை வகைகள், நாட்டு மாதுளை, வாழை, செவ்வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகள், இனிப்புகள், மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், குளியல் பொடி, நாட்டுக்கோழி, இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பாரம்பரிய மதிய உணவு

மகளிர் குழுக்கள் மூலம் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மதிய உணவுக்கு தினை பாயசம், வரகு அரிசி காய்கறி சாதம், மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மற்றும் உருளைகிழங்கு பொரியல் சமைக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற குழந்தைகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்வுகள் அதைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

பனை பொருட்களை மையப்படுத்திய சந்தை

சந்தையில் ஒவ்வொரு விற்பனையின்போதும் காலை 11 மணி வரை சுத்தமான பதனீர் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. அத்துடன் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலை கைவினைப் பொருட்கள், பனங்கிழங்கு, நுங்கு ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

குப்பை இல்லாமல் கூடிக் கலையும் சந்தை

சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு விற்பனை செய்யக் கூடுகின்றன. 1000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து செல்கின்றனர். ஆனாலும் இங்கு குப்பையே விழுவதில்லை. சாப்பிட சில்வர் தட்டுகள், சூப், தேநீர், காபி ஆகியவற்றுக்கு சில்வர் தம்ளர்கள், பதனீருக்கு கண்ணாடி தம்ளர் ஆகியவை அளிக்கப்படுகின்றன. பொருட்களை வாங்க நுகர்வோரே பைகளைக் கொண்டு வந்துவிடுவதால் குப்பைகள் சேருவதில்லை.

சந்தை எப்போது?

மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊரு சந்தை கூடுகிறது. இயல்வாகை மற்றும் நம்ம ஊரு சந்தை ஃபேஸ்புக் பக்கங்களின் மூலம் தேதியைத் தெரிந்துகொள்ளலாம்.

இம்முறை ஜனவரி 7-ம் தேதி சந்தை கூடுகிறது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 வரை சந்தை நடைபெறும். கடந்த முறை விற்பனையின்போது மதியத்துக்குள் அனைத்துப் பொருட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் வருங்காலங்களில் கடைகள் மற்றும் பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்கிறார்.

இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் இந்த தற்சார்பு இயல்வாகை சந்தை, விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் வரும், வரட்டும்.

தொடர்புக்கு: 9942118080, 9894332717.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x