இயற்கை சோப் தயாரிப்பில் பழங்குடியின பெண்கள்!

By செய்திப்பிரிவு

ஆர்.டி.சிவசங்கர்

ரசாயனப் பொருட்கள் இல்லாமல், இயற்கை முறையில் தேன் மெழுகிலான சோப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பர்லியாறு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள்.

தமிழகத்தில் அதிக பழங்குடியின மக்கள் வாழும் பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் இருளர், குறும்பர், கோத்தர், தோடர், பனியர், காட்டுநாயக்கர் என 6 வகை பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். பழங்குடியின மக்களில் இருளர் மற்றும் குறும்பர் இன மக்கள் தற்போதும் வனத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கோழிக்கரை, குரும்பாடி, புதுக்காடு, வடுகன்தோட்டம் ஆகிய  பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில், புதுக்காடு கிராமத்தில் 24 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இந்த பழங்குடியினர், வனத்திலிருந்து லவங்கம், பலா, தேன் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், பலாப் பழங்களை உண்ண யானைக் கூட்டம் அப்பகுதியில் வந்து விடுவதால், வனத் துறை பலாப்பழங்களை சாலையோரங்களில் விற்கத் தடை விதித்தது. இதனால், பழங்குடியிருக்கு கிடைத்து வந்த வருவாய் குறைந்துவிட்டது.

ஆண்கள் வனப் பொருட்கள் சேகரிப்புப் பணியை மேற்கொள்ளும் நிலையில், இங்குள்ள பழங்குடியின பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பாளையத்துக்கோ அல்லது குன்னூருக்கோதான் செல்ல வேண்டும்.  அதுவும், அங்கு பழங்குடியின பெண்களுக்கு தோட்ட வேலை மட்டுமே கிடைக்கும். கூலியும் குறைவு. அதுதவிர, பேருந்துக் கட்டணம்போக, மிகக் குறைந்த வருவாயே மிஞ்சும்.  இதனால், அந்தப் பகுதி பெண்கள் வேலைக்குச்  செல்லவில்லை. வருவாய் இழந்ததால் வறுமையில் வாடி வந்தனர். 

இந்நிலையில், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக தனியார் தொண்டு நிறுவனம் சோப்பு தயாரிக்கும் தொழிற்கூடம் அமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், சோப் தயாரிக்க பயிற்சியும் வழங்கியுள்ளது. 

இயற்கையில் கிடைக்கும் தேன் மெழுகைக் கொண்டு, குளியல் சோப் மற்றும் லிப் பாம் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் தற்போது புதுக்காடு பழங்குடியின பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியாறு பகுதியில் இந்த இயற்கை சோப் மற்றும் லிப் பாம் ஆகியவற்றை ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர். 

சோப் தயாரிக்கும் பெண்கள் கூறும்போது, “குளியல் சோப்புகளில் காஸ்டிக் சோடா உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சருமத்துக்கு தீங்கானவை. நாங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் அடையை மட்டுமே பயன்படுத்தி சோப் தயாரிக்கிறோம்.  இதற்காக தனியார் நிறுவனம் தொழிற்கூடம் அமைத்து கொடுத்துள்ளது. மேலும், நாங்கள் தயாரிக்கும் பொருட்களை அவர்களே விற்றுத் தருகின்றனர். அதிக அளவிலான உற்பத்திக்கு முன்பதிவும்  செய்துள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்