ஆம்பூர் கலவரத்தின் பின்னணி: பிரச்சினைக்கு காரணமான பெண்ணை பிடிக்க தனிப்படை - உளவுத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

உளவுத்துறையின் அலட்சியமும் போலீஸாரின் மெத்தனப் போக்கும் ஆம்பூர் கலவரத்துக்கு காரணமாகிவிட்டது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். பிரச்சினைக்கு முக்கிய காரணமான இளம் பெண்ணை கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல் அஹ்மது (26). பள்ளிகொண்டா போலீஸார் தாக்கியதாகக் கூறி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 26-ம் தேதி ஷமீல் அஹ்மது உயிரிழந்தார். இதற்கு, காரணமான ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜை கைது செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் கடந்த சனிக்கிழமை இரவு ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடித்து நெறுக்கப்பட்டன, தனியார் மருத் துவமனைகள், கடைகள் சேதப் படுத்தப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைப்பு, போலீஸார் மீது கல்வீச்சு என ஆம்பூர் நகரம் திடீரென கலவர பகுதியாக மாறியது. போலீஸார் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கலவர சம்பவம் தொடர்பாக 6 தனித் தனி வழக்குகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இளம்பெண்ணின் நிலை என்ன?

பிரச்சினைக்கு காரணமாக கூறப்படும் மாயமான இளம் பெண்ணின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (26). இவரது கணவர் பழனி. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்தார். அப்போது, ஷமீலுடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து ஷமீல் நின்றுவிட்டார். திருமணமான அவர், தனது குடும்பத்தை ஆம்பூரில் விட்டுவிட்டு ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

கடந்த மே மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலி டம் சென்றுவிட்டார். மறுநாள் (25-ம் தேதி) பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.

ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவரது எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. பவித்ரா வும் வீடு வந்து சேரவில்லை. இந்த தகவலின் அடிப்படையில் தான் ஷமீலை விசாரணைக் காக போலீஸார் அழைத்தனர். விசாரணையின் போது, பவித்ரா குறித்த தகவலை தெரிவிக்க ஷமீல் மறுத்துவிட்டார்’’ என்றனர்.

காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘பவித்ரா மாயமான வழக்கு குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

தடையை மீறி போராட்டம்

இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ரஹீம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய உமராபாத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

உளவுத்துறை செயலிழப்பு?

உளவுத்துறை விழிப்புடன் இருந்திருந்தால் ஆம்பூரில் கலவரம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஷமீல் அஹ்மது உயிரிழந்தவுடன், ஆம்பூரில் குறிப்பிட்ட சில அமைப்பினர் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அவற்றை உளவுத்துறை கண்காணிக்காமல் விட்டுவிட்டதாக புகார் எழுந்துள் ளது. ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் கசிந்தும், அதை தடுக்க உளவுத் துறை யினர் தவறிவிட்டனர் எனக் கூறப் படுகிறது. வன்முறை சம்பவம் நடந்து முடிந்த பின்னரே ஆம்பூரில் தடைச்சட்டம் போடப்பட்டது. இதை முன்கூட்டியே செய்திருந்தால், பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது.

ஆம்பூர் வன்முறைக்கு உளவுத் துறை செயலிழந்து போனதும், போலீஸாரின் மெத்தனப் போக் குமே காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆம்பூரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பி னும் வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா தலைமையில், 4 மாவட்ட போலீஸார் ஆம்பூரில் முகாமிட்டுள்ளனர்.

கைதிகளுக்கு பிரியாணி

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 30 பேர், வேலூர் பாஸ்டல் சிறையில் 7 பேர், கடலூர் மத்திய சிறையில் 32 பேர், சேலம் மத்திய சிறையில் 26 பேர் என மொத்தம் 95 பேர் நேற்று அதிகாலை அடைக்கப்பட்டனர்.

வழக்கமாக சிறையில் கைதிகளை அடைக்கும் முன்பாக அவர்களுக்கு போலீஸார் உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, வேலூரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 37 பேருக்கும் உணவு வழங்க போலீஸார் தயாராகினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் ரம்ஜான் நோன்பில் இருப்பதால், தாங்கள் ஏற்பாடு செய்யும் பிரியாணியை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை போலீஸார் ஏற்றனர்.

அதேநேரம், முக்கிய விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் சிறைக்குள் பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை. எனவே, வேலூரைச் சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த பிரியாணி 37 பேருக்கும் சிறை வாசல் வளாகத்தில் பரிமாறப்பட்டது. பிரியாணி சாப்பிட்ட பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

24 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்