அடிப்படை வசதிகள் இல்லா மணல்மேடு அரசுக் கல்லூரி: புதிய கட்டிடத்துக்கு மாற்ற கோரிக்கை

By கரு.முத்து

நாகை மாவட்டம், மணல்மேட்டில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்துக்கு கல்லூரியை மாற்றி, நடப்பாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேட்டில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் மணல்மேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில், 42 மாணவர்கள் சேர்ந்தனர். முதலாண்டு முடிந்து, தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இக்கல்லூரி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

திருமண மண்டப உணவுக் கூடத்தை அட்டைகளால் தடுத்து, 5 வகுப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சேர்ந்த 42 மாணவர்களுக்கு இந்த வகுப்பறைகள் போதுமானதாக இருந்தன. ஆனால், தற்போது 160 மாணவர்கள் சேர்ந்துள்ளதால், குறைந்தபட்சம் 10 வகுப்பறைகளாவது தேவை. இதனால், கல்லூரி நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது.

மாணவர்களுக்கு போதிய இடவசதி, கழிப்பிடம், குடிநீர், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி அறை என எந்த வசதியுமே இதுவரை செய்யப்படவில்லை. மேலும், தேவையான அளவுக்கு பேராசிரியர்கள், உதவிப் பேராசியர்கள், பணியாளர்களும் இல்லை.

மொத்தம் 15 பேராசிரியர்கள் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது 4 பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் மற்றும் பி.காம். என 5 பாடப் பிரிவுகள் உள்ள நிலையில், 4 பேராசிரியர்களைக் கொண்டு அனைவருக்கும் எப்படி பாடம் நடத்த முடியும் என்று மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, போதுமான இடவசதி மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வேறு இடத்துக்கு கல்லூரியை மாற்றி, தேவையான அளவுக்கு பேராசிரியர்களை நியமித்து, நடப்பாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பெர்னிஸ் பென்னட் கூறும்போது, “தற்போது கல்லூரிக்கு போதுமான இடவசதி இல்லாததைக் கருத்தில் கொண்டு, தலைஞாயிறில் உள்ள அரசு கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, அரசும் ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் கட்டிடப் பணி தொடங்கப்படுமென எதிர்பார்க்கிறோம்.

மாணவர்களின் நலன் கருதி, அங்கு தற்காலிக கூடம் அமைத்து, அதில் வகுப்புகளைத் தொடங்கலாம் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அங்கேயே வகுப்புகள் தொடங்கப்படும். அதேபோல, விரைவில் பேராசிரியர்களும் வர உள்ளனர்” என்றார்.

அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி, மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

வணிகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்