நிலச் சட்டத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட் மறியல்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது

By செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை உடனடியாக கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவுக்கான காலம் இன்னும் 2 வாரங்களில் முடிகிறது. இதனால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மீண்டும் அவசர சட்டமாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு மூன்றாவது முறையாக அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்து வருவதைக் கண்டித்தும், இந்தச் சட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவில் இன்று மறியல் போராட்டத்தை மேற்கொண்டது.

தமிழகத்தில் மறியல், கைது

தமிழகம் முழுவதும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை, ராமநாதபுரம், தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸ் கைது செய்தது.

ராமநாதபுரத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். தேனியில் சுமார் 250 பேரும், மதுரையில் சுமார் 150 பேரும், காஞ்சிபுரத்தில் சுமார் 200 பேரும், திருவள்ளூரில் சுமார் 180 பேரும் , வேலூரில் சுமார் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் சுமார் 500 பேரும், கரூரில் சுமார் 200 பேரும், பெரம்பலூரில் 70 பேரும், அரியலூரில் 75பேரும், திருவண்ணாமலையில் 350 பேரும், திருநெல்வேலியில் சுமார் 600 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் சுமார் 1000 பேரும், விருதுநகரில் சுமார் 2000 பேரும்,கிருஷ்ணகிரில் சுமார் 2000 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நல்லகண்ணு தொடங்கி வைத்த மறியல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உட்பட ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, ‘‘விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்’’ என்றார்.

98 ஆயிரம் பங்கேற்பு: இரா.முத்தரசன்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கூறுகையில், ''தமிழகம் முழுமையும் பெருமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதிலும் 372 மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாகவும் ரயில் நிலையங்கள் முன்பாகவும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் இயக்கத்தில் 98 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 18 ஆயிரம் பெண்கள் பங்கு கொண்டனர். கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் விவசாயிகளை பாதுகாக்க நடைபெற்ற இந்த தேசிய இயக்கத்தில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மாதர்களுக்கும் கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்திலும் நாடு முழுமையும் நடைபெற்றுள்ள இப்பேரியக்கத்திற்கு பின்னராவது மத்திய அரசாங்கம் நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்தை முழுமையாக திரும்பப்பெற முன்வர வேண்டும்.

இந்திய, அந்நிய பெருமுதலாளிகளுக்கு சாதகமான இந்த சட்டத்தை அமுலாக்க தொடர்ந்து பாஜக அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்த நேரிடும்'' என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

36 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்