தமிழகத்தில் விரைவில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு

By சி.கண்ணன்

தமிழகத்தில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதிக்காக காத்திருக்கிறது. இவை தவிர, 13 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

ஆனால், பல் மருத்துவப் படிப்புக்கு (பிடிஎஸ்) சென்னையில் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. அதேநேரத்தில் 29 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, மீதமுள்ள 85 இடங்களே மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் மருத்துவ கவுன்சலிங்கில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் பிடிஎஸ் படிப்பை தேர்வு செய்கின்றனர். ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே இருப்பதால், முதல் நாள் கவுன்சலிங்கிலேயே 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பிவிடுகிறது. அதன்பிறகு பிடிஎஸ் படிப்புக்கு தனியார் கல்லூரிகளையே தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல் மருத்துவ சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல் மருத்துவமனை முன்னாள் முதல்வர் நாசர் கூறும்போது, ‘‘செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியையும் ரூ.50 கோடியில் கட்டி முடித்துவிடலாம் என்று கடந்த ஆண்டு தமிழக அரசிடம் தகுந்த ஆதாரங்களோடு தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால்தான், சிறந்த பல் டாக்டர்களை உருவாக்க முடியும்’’ என்றார்.

தமிழ்நாடு பல் மருத்துவ சங்கத்தின் செயலாளர் அருண், சட்ட ஆலோசகர் முரளி ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூலிக்கின்றனர். தனியார் பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இனி அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். ஆனாலும், அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அரசே புதிதாக பல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியாக பல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கலாம். அடுத்த மாதம் நடக்கவுள்ள சங்கக் கூட்டத்தில், குறைந்தது 5 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளையாவது தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கும் பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலிடமும் கொடுக்க இருக்கிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக தமிழக சுகா தாரத்துறை உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘தமிழகத்தில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது பரி சீலனையில் உள்ளது. குறிப்பாக தென்மாவட்டத்தில் தொடங்கு வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப் படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்