அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அலட்சிய நோக்குடன் புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தமிழக அரசு அலட்சிய நோக்கோடு புறக்கணித்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மாணவர்கள், எதிர்கால சந்ததியினர் தங்களை அறிவுப்பூர்வமாக செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அண்ணாவின் நினைவாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிர்மாணித்தேன். நான் திறந்து வைத்தேன் என்பதாலேயே, அதை மருத்துவமனையாக மாற்றப்போவதாக ஜெயலலிதா உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அந்த முடிவு அமலாகாமல் உள்ளது.

இந்நிலையில், அண்ணா நூலகத்தை எந்த அளவுக்கு பாழ்படுத்தவும் மாசுபடுத்தவும் முடியுமோ அந்த அளவுக்கு அதற்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இதை கண்டித்து தமிழக ஏடுகள் எழுதி வருவது ஆறுதல் அளிக்கிறது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் அரங்கம் கல்யாண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் பராமரிப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று ‘இந்து’ உள்ளிட்ட நாளிதழ்கள் எழுதியுள்ளன. இதையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இதையறிந்து, திமுக வழக்கறிஞர் வில்சன் மூலம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல கூறினேன். இதன் பேரில், அண்ணா நூலகத்தை திருமணத்துக்காக வாடகைக்கு விடக்கூடாது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பணம் வாங்கப்பட்டிருந்தால் திருப்பித் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சி தொடங்கியதுமே இந்த நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பான வழக்கில், ‘‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் சேவையையோ, செயல்பாட்டையோ நிறுத்தினால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது’’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில்தான் நூலகம் அதே இடத்தில் இயங்கி வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத அளவுக்கு நூலகத்தை அலட்சிய உணர்வோடு அரசு புறக்கணித்து வருகிறது.

இந்த 4 ஆண்டுகளில் இணை இயக்குநர் உட்பட யாரும் ஆய்வுக்கு வரவில்லையாம். புதிதாக ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. மாதம் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டும் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். ஒரு நாளுக்கு 2 ஆயிரம் பேர் என இருந்த வாசிப்பாளர்கள் எண்ணிக்கை இப்போது 1,200 ஆக குறைந்துள்ளதாம்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவாக எழுப்பப்பட்ட நூலகத்தில், ஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு காரணமானவர்கள் என்றாவது ஒருநாள் தங்களுடைய மனசாட்சிக்கு பதில் சொல்லவேண்டி வரும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்