கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயம்: இளங்கோவன்

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம்' என்கிற நிலையை இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் கடுமையான முறையில் தெரிவிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் 'சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல்பகுதிக்குள் வந்தால்மீனவர்களைச் சுடுவோம்; அப்படிச் சுடுவதில் எந்த மனித உரிமை மீறலும் இல்லை. இதற்குச் சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்று கூறியிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. கடந்த காலத்தில் ராஜபக்சேவுக்கு இல்லாத துணிச்சல் இன்று ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எப்படி வந்தது?

இன்னும் ஒருசில நாள்களில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவை மிரட்டுகிற வகையில், இலங்கைப்பிரதமர் பேசியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்திய - இலங்கை அரசுகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில்; ''எல்லை தாண்டி வருகிற மீனவர்கள்எவரையும் சுடக்கூடாது'' என்று அதில் கூறப்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டைக் காலில் போட்டுமிதிக்கிற வகையில், ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது குறித்து, இந்திய அரசு தனது கடும்ஆட்சேபனையை இதுவரை ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு மாறாக இலங்கை பிரதமர் தனிப்பட்ட முறையில் என்னிடம் வருத்தம் தெரிவித்தார் என்று கூறுவது ஆணவ பேச்சை மூடிமறைக்கிற செயலாகும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் இருக்கும்போதே இலங்கைப் பிரதமர் இப்படிப் பேசுவதற்கு எங்கேயிருந்து துணிவு வந்தது? 120 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு எதிராக, 2 கோடி மக்கள் வாழுகிற இலங்கை நம்மை அச்சுறுத்துகிறதா? மிரட்டிப்பார்க்கிறதா? இதற்கெல்லாம் பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது?

இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால கண்ணீரைத் துடைத்தெறிய ராஜிவ்காந்தியால் உருவானதுதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 13வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கு கடந்த காலத்தில் ராஜபக்சே அரசும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பயங்கரவாதத்தைக் காட்டி, அதிகாரப்பகிர்வைக் காலம் தாழ்த்தி வந்தது. ஆனால், மே 2009 போருக்குப் பிறகு, வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து சி.வி.விக்னேஷ்வரன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும், தமிழர்களுக்குச் சமஉரிமை, சமவாய்ப்பு வழங்க இலங்கை அரசு மறுப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படவும், இலங்கையில் வாழ்கிற 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய - இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு கருதியும், பிரதமர் இந்திராவும் சிரிமாவோ பண்டாரநாயகாவும் 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் இரு ஒப்பந்தங்கள் கச்சத்தீவு குறித்து நிறைவேற்றினர். அதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, சர்வதேசக் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டன. ஆனால், இந்திய - இலங்கை அரசுகளால் இப்பகுதியை வரலாற்றுரீதியான பாரம்பரிய கடல்பகுதிகள் என்றே கருதி வந்தன.

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டியநிலை இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நமது மீனவர்கள் தாக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதிலிருந்து தமிழ் மீனவர்களை மீட்டு, வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசின் அராஜகப்போக்குக் காரணமாக எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. குறுகலான கடல் எல்லைப் பகுதிகளில் இருநாட்டு மீனவர்களும் பயன்பெறும் ஒப்பந்தம் மிகவும் அவசியமாகும். ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆணவப்பேச்சு, அந்த ஒப்பந்தத்திற்கான வாய்ப்பை முற்றிலும் அடைத்துவிட்டது.

எனவே, பிரதமர் ராஜிவ்காந்தியும் அதிபர் ஜெயவர்த்தனாவும் 1987இல் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 13வது அரசமைப்புச் சட்டத்திருத்ததின்படி, இலங்கைத் தமிழர்களின்வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், ''இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயகாவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம்'' என்கிற நிலையை இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் கடுமையான முறையில் தெரிவிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நமது ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்ற மறுக்கிறபோது, அவர்களோடு நாம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

28 ஆண்டுகள் கழித்து, பிரதமர் ராஜிவ்காந்திக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்வதினால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. நமது பிரதமர் இலங்கை சென்று தற்போது செய்யவேண்டிய பணிகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராலேயேசெய்யமுடியும். இதற்காக இந்தியப் பிரதமர் செல்லவேண்டிய அவசியமில்லை. அதுவும், இலங்கைப் பிரதமரின் ஆணவப்பேச்சுக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் மங்கிவிட்டது.

இதற்குப் பிறகு, என்ன பேசி, என்ன தீர்வுகாணப்போகிறார்கள்? இச்சூழலில், இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வதை ரத்துசெய்வதுதான்,இலங்கை அரசின் எதேச்சதிகாரப்போக்குக்கு இந்தியா தருகிற சரியான பதிலடியாக இருக்கமுடியும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்