வனத்தின் துப்புரவாளர்களாக செயல்படும் காட்டுப்பன்றிகள்: தமிழகத்தில் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்

By கல்யாணசுந்தரம்

வனத்தின் துப்புரவாளர்களாகச் செயல்படும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் மழை பெய்யவும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், காற்றில் ஏற்படும் மாசுகளைக் கட்டுப்படுத்தவும் மரங்கள் பேருதவி புரிகின்றன. இதன் காரணமாகத்தான் உலகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் தன்னார்வலர்கள், வனத் துறையினர், மாணவர்கள் ஈடுபட்டு வரும் அதேநேரத்தில் வனத்தில் வாழும் காட்டுப்பன்றிகளும் இந்த பணிக்கு உதவிகள் புரிந்து வருகின்றன என்கின்றனர் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள்.

அதேநேரத்தில் காட்டுப் பன்றிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இவற்றைக் கொன்று விடுகின்றனர். காட்டுப்பன்றிகளை வளர்ப்பதோ, கொல்வதோ, துன்புறுத்துவதோ வனச்சட்டத்தின்படி தண்டனைக் குரிய குற்றமாகும்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை, அவற் றால் மக்களுக்கு எந்த அளவுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்பது தொடர்பாக கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, துறையூர் (பச்சை மலை), துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை வனத்துறை உதவியுடன் பல்லுயிரிய பாதுகாப்பு அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. இந்த பணியை மாவட்ட வன அலுவலர் சதீஷ் தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார்.

கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்ட வன உயிரின ஆராய்ச்சியாளர் ஏ.குமரகுரு ‘தி இந்து’விடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப் படுவது இதுவே முதல்முறை. ஏற்கெனவே பொள்ளாச்சி, சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

காட்டுப்பன்றிகளைப் பொறுத்த வரையில் அவ்வப்போது கீழுள்ள மண்ணைக் கிளறி, பூமிக்கு அடியில் உள்ள கிழங்குகளை உட்கொள்ளும். இதனால் வனத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் பூமிக்கு அடியிலேயே சேமிக்கப்படும். மேலும், பறவைகளின் எச்சம் மற்றும் மரங்களிலிருந்து விழும் விதைகள் பூமிக்கு அடியில் சென்று மீண்டும் முளைத்து மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காட்டுப்பன்றிகளின் செயல் பேருதவி புரிகிறது.

அதேபோன்று, காட்டுப்பன்றிகள் ஓராண்டில் 7 முதல் 25 குட்டிகள் வரை போடும். இவை வனத்தில் உள்ள புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உண வாகின்றன.

இதற்கு மேலாக காட்டுப்பன்றிகள் மற்றும் கழுகுகளை வனத்தின் துப்புரவாளர்கள் என்றும் அழைக் கிறோம். வனவிலங்குகள் உட் கொண்டபின், விட்டுச்செல்லும் மிருகங்களின் எஞ்சிய இறைச்சியை காட்டுப்பன்றிகள் உட்கொண்டு வனத்தை தூய்மைப்படுத்தி விடுகின்றன. இதனால், இறைச்சி யின் மிச்சங்கள் அழுகி, அதனால் பரவும் தொற்று நோய்கள் தடுக்கப்படுகின்றன.

இருந்தபோதிலும், இவை வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களை சேதப் படுத்துவதாக தொடர்ச்சியாக வரும் புகார்களை அடுத்து இதன் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக இந்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் குமரகுரு.

“இந்த கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் என மொத்தம் 90 பேர் ஈடுபட்டனர். நேரடி பார்வை, கால்தடம், பள்ளம் தோண்டிய இடங்கள், எச்சங்கள் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை விவரம் விரைவில் தெரியவரும்” என்றார் மாவட்ட வன அலுவலர் சதீஷ்.

திருச்சி மாவட்டம் பச்சைமலையில் காட்டுப்பன்றிகளின் தடயங்களைச் சேகரிக்கும் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்