திட்டங்கள் இனிப்பு; வரிவிதிப்புகளில் புளிப்பு: ராமதாஸ் கருத்து

By செய்திப்பிரிவு

2015- 16 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பும், புளிப்பும் கலந்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

வரவேற்கப்பட வேண்டியவை

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் மேம்படுவதற்கு வகை செய்யும். ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்ற வினா எழுந்த நிலையில், அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், அதற்கு ரூ.34,699 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

தொழிலாளர்களுக்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான முத்ரா வங்கி, அடுத்த 7 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்குடன் மொத்தம் 7 கோடி புதிய வீடுகள் கட்டப்படவிருப்பது, 80 ஆயிரம் இடைநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஆகியவை அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் சமூகத்திற்கு பயனளிக்குமென்பது உறுதி.

கல்வித்துறைக்கு ரூ.68,968 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.33,152 கோடியும், ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ.79,526 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட சற்று அதிகம் தான் என்றாலும் போதுமானதல்ல.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6 விழுக்காடும், சுகாதாரத்திற்கு 2 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். விவசாயக் கடனுக்காக ரூ.8.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டின் மின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 5 அல்ட்ரா பவர் மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதும், அதிக அளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருப்பதும் பயனுள்ள நடவடிக்கைகள்.

ஏமாற்றம் அளிப்பவை

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்கவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால், அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனிநபர் வரிவிகிதம் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன.

பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைத்துள்ள மத்திய அரசு, தனிநபர்களின் வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது சரியல்ல. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது பெரு நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்குமோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தனிநபர்களின் வரவும், செலவும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பணவீக்க மதிப்பின் அடிப்படையில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ஆண்டு தானாகவே அதிகரிக்கும் வகையில் நேரடி வரிகள் கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டிற்காக முதலீடு செய்யப்படும் தொகையின் வரிவிலக்கு வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது ஓரளவு பயனளிக்கும். அதேபோல், போக்குவரத்துப் படி மீதான வருமானவரி விலக்கு உச்சவரம்பு இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பதும் மாத ஊதியதாரர்களுக்கு பயன்தருவதாக அமையும்.

ஆனால், கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும் நிலையில், அதன் விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக அதிகரித்திருப்பது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்.

மொத்தத்தில் 2015- 16 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பும், புளிப்பும் கலந்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது.'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

26 mins ago

க்ரைம்

33 mins ago

வணிகம்

37 mins ago

சினிமா

34 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

56 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்