‘தி இந்து’ இளம் விஞ்ஞானி தேர்வில் பெங்களூரு மாணவர் ரோஹித் வெற்றி: அமெரிக்காவின் ‘நாசா’வுக்கு செல்கிறார்

By செய்திப்பிரிவு

‘தி இந்து’ இளம் விஞ்ஞானி தேர்வில் பெங்களூரு மாணவர் ரோஹித் வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வுக்கு செல்லும் வாய்ப்பை பெறுகிறார்.

பள்ளி மாணவர்களிடம் அறிவி யல் ஆர்வத்தையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் வகையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அறிவியல் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதையொட்டி தேசிய அளவில் மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் (புராஜெக்ட்ஸ்) பரிசீலிக்கப்பட்டு முதலிடத்தைப் பிடிக்கும் மாணவர் அல்லது மாணவி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ சென்றுவரும் வாய்ப்பை பெறுவார்.

அந்த வகையில், 2015-ம் ஆண்டுக்கான ‘தி இந்து’ அறிவியல் விழா மற்றும் அறிவியல் மாதிரி படைப்புகளுக்கான இறுதி போட்டி சென்னையை அடுத்த படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. ‘தி இந்து’, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, இந்துஸ் தான் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த அறிவியல் விழாவை அமெரிக்க தூதரக அதிகாரி ஜெஃப் ரைட்னர், ரஷ்ய தூதரக அதி காரி மிகேல் கார்ப்படவ் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

அமெரிக்க தூதரக அதிகாரி ஜெஃப் ரைட்னர் பேசும்போது, “இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகள் 21-ம் நூற்றாண்டில் பெரிதும் வலுப்பெற்றிருக்கின்றன. அறிவியல் தொழில்நுட்பம், அணு சக்தி, விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும்” என்றார்.

ரஷ்ய தூதரக அதிகாரி மிகேல் கார்ப்படவ், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஆண்டுதோறும் பல்வேறு வெற்றிகளை கண்டு வருகிறது. விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் ரஷ்யா மகிழ்ச்சி அடைகிறது” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்துஸ்தான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக இயக்குநர் அசோக் வர்கீஸ், பதிவாளர் பொன். ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இயக்குநர் ஸ்ரீமதி கேசன் நன்றி கூறினார்.

நாடு முழுவதும் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் இளம் விஞ்ஞானி போட்டிக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 160 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு அவர்களின் அறி வியல் படைப்புகள் பரிசீலிக்கப் பட்டன. விதவிதமான ஏவுகணைகள், குட்டி விமானங்கள், கிளைடர்கள், செவிலியர் பணியைச் செய்யும் ரோபோ, செல்போனில் பிறப்பிக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப விவசாயப் பணியைச் செய்யும் ரோபோ உட்பட விண்வெளி, மருத்துவம், ரோபாட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல், சுற்றுச்சூழல், விமான தொழில்நுட்பம் ஆகிய 6 பிரிவுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அறிவியல் மாதிரிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

அவற்றில் சிறந்த மாதிரிகளை உருவாக்கிய 18 பேர் முதல் சுற்றுக்கு தேர்வுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டு ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 3 பேர் இறுதிச்சுற்றுக்கு அனு மதிக்கப்பட்டனர். இறுதிச்சுற்றில், போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு குறிப்பிட்ட தலைப்பு கொடுக்கப் பட்டு அதுகுறித்து 2 நிமிடம் பேசினர். இதில், முதல் இடத்தை பெங்களூரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் ரோஹித்தும், 2-ம் இடத்தை திருச்சி ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல் நிலைப்பள்ளி மாணவி பூர்வியும், மதுரை மகாத்மா காந்தி மெட்ரி குலேஷன் பள்ளி மாணவர் சொக்க லிங்கமும் பிடித்தனர். ரோஹித், அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு கல்வி முகாமில் பங்கு பெறும் வாய்ப்பையும், பூர்வி, சொக்கலிங்கம் ஆகியோர் மாண வர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மலேசியாவுக்கு சென்றுவரும் வாய்ப் பையும் பெறுகிறார்கள்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில், இந்துஸ்தான் பல்கலைக்கழக வேந்தர் எலிசபெத் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்