பட்டினப்பாக்கம் அருகே விழுந்த குட்டி கேமரா விமானம்: அனுமதி பெறாமல் பறக்கவிட்டால் கைது- காவல் ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே பறந்து வந்து விழுந்த குட்டி கேமரா விமானத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நீச்சல் குளம் அருகே நேற்று முன்தினம் மாலையில் வெளிநாட்டு பயணிகள் சூரிய குளியல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வானில் பறந்து வந்த குட்டி கேமரா விமானம் அவர்கள் அருகே விழுந்தது.

அதை வெளிநாட்டு பயணிகள் எடுத்து ஓட்டல் பாதுகாப்பு அதிகாரி சஞ்சீவ்குமாரிடம் கொடுத்தனர். மறுநாள் காலை வரை அதை கேட்டு யாருமே வராததால் சஞ்சீவ்குமார் அதை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த குட்டி கேமரா விமானத்தில் நவீன கருவிகள் இருந்ததால், உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா? என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.

இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கூறும்போது, "குட்டி கேமரா விமானத்தில் இருந்த சீரியல் எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, மும்பையை சேர்ந்த ‘ஆஸ்கான்' என்ற நிறுவனம் அதை வாங்கியது தெரிந்தது.

அந்த நிறுவனத்தையும் தொடர்பு கொண்டபோது, சென்னை வேளச்சேரியை சேர்ந்த ராஜ்(29) என்பவர் ரூ.85 ஆயிரத்துக்கு வாங்கியிருப்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து ராஜை பிடித்து விசாரித்தோம். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வீடியோ படம் எடுப்பதற்காக இதை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், இது போன்ற கேமரா விமானங்களை பறக்கவிடுவதற்கு காவல் ஆணையர் அலுவலகத் திலும், விமான போக்குவரத்துத் துறையிலும் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அவர் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதனால் ராஜ் கைது செய்யப்பட்டார்.

பலூன்களை பறக்க விடுவதற்கு கூட காவல் ஆணையர் அலுவல கத்தில் அனுமதி பெற வேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் இது போன்ற கேமரா விமானங்களை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங் கள் தடை விதிக்கவில்லை. ஆனால், அனுமதி பெறாமல் பறக்கவிடுபவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

இந்த குட்டி கேமரா விமானம் 3 கிலோ எடையுள்ளது. இது மக்கள் மீதோ, வாகன ஓட்டிகள் மீதோ அல்லது ஏதாவது ரசாயன நிறுவனங்கள் மீதோ விழுந்திருந்தால் பெரிய விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறோம்.

இதேபோல கடந்த ஆண்டு அண்ணாசாலையில் விழுந்த குட்டி விமானத்தால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது" என்றார்.

கூடுதல் ஆணையர் ஆபாஷ் குமார், இணை ஆணையர் வரத ராஜன், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ரவிசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்