தமிழக கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயக்கம்?- ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் அதிகரிப்பு

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி உடனே உத்தரவிட வாய்ப்பில்லை என தமிழக அதிகாரிகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, ஜல்லிக்கட்டை நடத்த உரிய ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்திருந்தார். மத்திய அரசு 2011-ல் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்து அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறும்படி கோரியுள்ளோம். இந்த உத்தரவைப் பெற்று, அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் அயூப்கான், ஆபிரகாம் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு புதுடெல்லி சென்றது. அங்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவர்கள் பேச்சு நடத்தினர். பாதுகாக்கப்பட்ட மற்றும் காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கும் பட்டியலில் காளைகளை சேர்த்து வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கு, உடனடியாக இதைச் செய்ய வாய்ப்பில்லை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இணைச் செயலாளர் ராஜேஷ் கூறியதாவது: புதுடெல்லியில் நடந்துவரும் பேச்சுவார்த்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டோம். அவர் கூறும்போது, ‘நேற்று நடந்த பேச்சில், தமிழகம் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டது. எவ்வளவு நாட்களில் இந்த முடிவு எட்டப்படும் என்பது குறித்தும், மத்திய அரசு அதிகாரிகள் உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கும் மேல் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமானால் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துவிட்டார்.

இதனால் ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்த வழி அடைபட்டு போய்விட்டது. இனிமேல் இருப்பது ஒரே வழிதான். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை உடனே விசாரணைக்கு எடுக்கச்செய்ய, தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கினால் மட்டுமே, ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்புள்ளது. அதுவும் இன்றைக்குள் (செவ்வாய்க் கிழமை) நடக்க வேண்டும்’ என்றார்.

தமிழக விலங்குகள் நலவாரிய அமைப்பின் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணன் கூறுகையில், ‘மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அரசாணை பிறப்பித்தால் அது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகிவிடும். இதனால் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பிக்காது’ என உறுதியாக நம்புகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்