ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: திருமாவளவன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அகில இந்திய அளவில் இடைத் தேர்தல்களுக்கு என புதிய விதிமுறைகளை வகுத்திட வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுப்பதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை.

பொதுவாக, இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் மேலோங்குவதால் வாக்காளர்கள் வந்து சுதந்திரமாக வாக்களிக்க இயலாத நிலை உருவாகிறது.

இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு எதிர்க்கட்சியினர் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில், ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அவர்கள், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் குறித்த தமது வேதனையை வெளிப்படுத்தினார்.

அதாவது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தேர்தல் காலத்தில் நிலவும் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று வருந்தி இருக்கிறார். வாக்காளர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் அவர்களை மொத்தமாக விலைபேசும் அவலம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது சனநாயகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் நேர்ந்துள்ள பெரும் தலைகுனிவாகும்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அகில இந்திய அளவில் இடைத் தேர்தல்களுக்கு என புதிய விதிமுறைகளை வகுத்திட வேண்டுமென தேர்தல் ஆணைத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

குறிப்பாக, இடைத் தேர்தலின்போது அமைச்சர்கள் பரப்புரை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் இடைத் தேர்தலில் வெற்றி வெற்றே தீர வேண்டும் என்னும் அடிப்படையில், அரசு எந்திரங்களை முழு வேகத்தில் ஈடுபடுத்துவது தமிழகத்தில் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இந்நிலையில், ஜனநாயக்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் நடைபெறும் இடைத் தேர்தலில் பங்கேற்பது பொருளற்றதாகும்.

எனவே, இடைத் தேர்தலுக்கென புதிய விதிமுறைகளை வரையறுக்க வலியுறுத்திடும் வகையிலும், இடைத் தேர்தலின்போது ஆளும் கட்சியினர் மேற்கொள்ளும் மேலாதிக்கப் போக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலும் திருவரங்கம் தொகுதி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல் புறக்கணிப்பது என முடிவு செய்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்