காவிரி பிரச்சினை, மீத்தேன் எதிர்ப்பு: சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் காவிரி பங்கீட்டு குழுவினை உடனே அமைக்கக் கோரியும் சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது, " காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை தடுக்க, மத்திய அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழக விவசாயிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, "காவிரி குறுக்கே புதிய அணைகள் கட்டினால் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மீத்தேன் எரிவாயு திட்டம் கொண்டு வந்தால் 100 கிராமங்கள் அழிந்து போகும். லட்சணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும். எனவே, டெல்டா விவசாயிகளின் பிரச்சினையை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினையாகக் கருதி அனைவரும் இணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும்" என்றார்.

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசும்போது, "காவிரி பிரச்சினை, தமிழகத்தில் உள்ள 5 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்சினை. காவிரியில் புதியதாக 2 அணைகள் கட்டுவதை மத்திய அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும். மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால், தஞ்சை பாலைவனமாகி விடும்" என்றார்.

தேமுதிக சார்பில் எம்.எல்.ஏ. அருள்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பாமக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதீன், வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்