ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்?- ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அவர் கோரியவாரே விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுவது "சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?" என்ற கேள்வியை எழுப்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய வினாவாகும்.

ஊழல் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல நோக்கத்தைக் காட்டுவதற்குக் கூட இவ்வழக்கு தகுதியற்றது என்பது தான் மக்களின் கருத்தாகும்.

அதிகபட்சமாக ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய சொத்துக் குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்கு இழுத்தடித்தவர் ஜெயலலிதா. இல்லாத காரணங்களைக் கூறி வழக்கு விசாரணையின்போது 185 முறை வாய்தா வாங்கியவர் ஜெயலலிதா. விசாரணை நீதிமன்ற நீதிபதி தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரையும் தமது வாய்தா அணுகுமுறையால் வெறுப்பேறியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஜெயலலிதா அவரது சொந்த நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும்போது, உச்சநீதிமன்றத்திற்கு அதை ஏற்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் என்னைப் போன்றவர்களின் மனதில் எழும் வினா.

உச்சநீதிமன்றத்தில் 64,919 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு மீதான விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படாதது குறித்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை. எந்தத் தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் விசாரணைக் கைதிகளாகவே தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடும் சோக வரலாறு நம்முன் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? என்பது தான் தெரியவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அதை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடாத நீதிமன்றம் இப்போது மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? என்ற வினா மக்களிடையே எழுந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி என்பதைப் போல, அவசரம் காட்டப்படும் நீதி..... புதைக்கப்பட்ட நீதி என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்; அடுத்த ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வழக்கை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகள் மீது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஜெயலலிதாவின் பிணை மனுவை முடித்து வைக்காமல் இன்னும் ஆய்விலேயே வைத்திருப்பதும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பிணை விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது; அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘‘ சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?’’ என்ற வினா சாமானியர் மனதில் மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை" இவ்வாறு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்