டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவை: அன்புமணி

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் குரூப் - 1 பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகள் 2015-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தியது. இத்தேர்வு மிகவும் நேர்மையாக நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. ஆனால், தேர்வாணையத் தலைவர் அருள்மொழி விடுப்பில் சென்றிருந்த நிலையில் மே 12-ம் தேதி முதல் தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டன.

முதன்மைத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. விடைத்தாள்கள் மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு தொலைக்காட்சி செய்தித் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. அதில் மாற்றப்பட்டதாக கூறப்படும் விடைத்தாளும் காட்டப்பட்டது. இதை ஆதாரமாகக் காட்டி இப்போட்டித் தேர்வில் பங்கேற்று பாதிக்கப்பட்ட ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை அனைத்தும் சரியாக நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடரப்படுவதற்கு காரணமான அந்த தொலைக்காட்சியை பழி வாங்கும் முயற்சிகளில் டிஎன்பிஎஸ்சி ஈடுபட்டிருக்கிறது. முதன்மைத் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவசரம் அவசரமாக நேர்காணல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊடகங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சிகளாக விளங்க வேண்டும். ஆனால், ஒருசில ஊடகங்கள்தான் ஊழலை துணிச்சலாக வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றையும் மிரட்டிப் பணிய வைக்க ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது. இத்தகைய மிரட்டலைக் கைவிட்டு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இந்த விஷயத்தில் துணிச்சலாக செயல்படும் ஊடகங்களுக்கு பாமக துணை நிற்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்