முருகன், நளினியை சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும். அவர்களை குறைந்தபட்சம் சிறை விடுப்பில் விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்து விட்ட நிலையில் தம்மை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து 12-ஆவது நாளாக உண்ணாநிலை நீடிக்கும் நிலையில், முருகனின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்களும், இவ்வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக 2014-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவு கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் மூன்றரை ஆண்டுகளாகியும் இவ்வழக்கில் முன்னேற்றமில்லை.

முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் கடந்த 27 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வெளியுலகைப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகி விட்டன. பேரறிவாளன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மீதமுள்ளவர்களில் ரவிச்சந்திரன் மட்டும் சில முறை சிறை விடுப்பில் சென்று வந்திருக்கிறார். நளினிக்கு அவரது தந்தை உயிரிழந்த போது மட்டும் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள நால்வருக்கும் ஒருமுறை கூட வெளியுலகைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக முருகன், நளினி இணையருக்கு சிறையில் பிறந்த குழந்தை இப்போது படிப்பை முடித்து விட்டு, திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்திருக்கிறது. பெற்றோராக அந்தக் குழந்தைக்கு எந்தக் கடமையையும் நிறைவேற்றாத முருகன், நளினி இணையர், திருமணத்தையாவது முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதற்காக, 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற முருகனின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்ற நளினியின் கோரிக்கையையும் அரசு இன்னும் ஏற்கவில்லை. 27 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு கிடப்பதே கடுமையான மனச்சிதைவை ஏற்படுத்தி விடும். அத்துடன், தங்கள் மகளின் திருமணத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்ய முடியவில்லையே என்ற கவலையும் கூடுதலாக சேர்ந்து கொண்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அத்தகைய மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவாகவே முருகன் உயிரையும் இழக்கத் துணிந்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார். 12 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர்களும், காவல்துறையினரும் கூறியுள்ளனர்.

முருகனின் உண்ணாநிலையை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் நேற்று முதல் வேலூர் சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவர்கள் இருவரின் உயிரும் மிகவும் முக்கியமானவை ஆகும். அவர்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எந்த விதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பெயரளவில் முருகனுடன் சில முறை பேச்சு நடத்திய அதிகாரிகள் பின்னர் அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டனர்.

முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும். ஆனால், உடனடியாக விடுதலைக்கு வாய்ப்பில்லாத நிலையில், அவர்களை குறைந்தபட்சம் சிறை விடுப்பில் விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். அவர்கள் மட்டுமின்றி, 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களையும், அவர்கள் விடுதலை வழக்கில் தீர்ப்பு வரும் வரை நீண்ட சிறை விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

கருத்துப் பேழை

52 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 mins ago

மேலும்