‘இன்ன தேதியில்.. இன்ன குழந்தை பிறக்கும்!’- இது அய்யனார் பூசாரியின் அருள்வாக்கு

By கரு.முத்து

ழைப்பேறும் மகப்பேறும் எப்பன்னு மனிதனுக்குத் தெரியுமா? - இந்தச் சொலவடைக்கு சவால் விடுகிறார் கலிதீர்த்தான். குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு, இன்ன வருடம், இன்ன தேதியில், இன்ன குழந்தை பிறக்கும் என்று சொல்லி அசத்துவது கலிதீர்த்தான் ஸ்பெஷல் என்கிறார்கள் மக்கள்!

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 3-ல் இருக்கும் கலிதீர்த்த அய்யனார் கோயில் பூசாரி இந்த கலிதீர்த்தான். கிராமக் கோயில் பூசாரிகள் என்றாலே நிச்சயம் அருள்வாக்குச் சொல்வார்கள். அவர்கள் சொல்வதில் சில நடந்துவிடும். பல நடக்காமலும் போய்விடும். ஆனால், கலிதீர்த்தான் சொன்னால் கச்சிதமாய் நடக்கும் என்கிறார்கள் செவ்வாய், வெள்ளிக்கு இங்கு குவியும் பக்தர்கள்.

குழந்தை சிலைகள்

குறிப்பாக, திருமணத் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிட்டவும் அருள்வாக்குச் சொல்கிறார் கலிதீர்த்தான். அவர் சொல்வது அப்படியே நடந்துவிடும் என்பதற்கு, காரியம் கைகூடியவர்கள் கோயில் வளாகத்தில் செய்து நிறுத்தியிருக்கும் ஏராளமான குழந்தை உருவ சிலைகளே சாட்சி என்கிறார்கள் மக்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்தக் கோயிலின் வளர்ச்சி பணிக்குழு செயலாளர் வீ.ராதாகிருஷ்ணன். “இந்த குழந்தை சிலைகள் எல்லாமே, இங்க வேண்டிக்கிட்டுப் போனவங்க நேர்த்திக்கடனா செஞ்சு வெச்சதுதான். குழந்தை இல்லாதவங்க இங்க வந்து அருள்வாக்குக் கேக்குறாங்க. அதுபடி, குழந்தை பிறந்ததும் குழந்தை உருவச் சிலையைச் செஞ்சுட்டு வந்து இங்க வெச்சு வணங்கிட்டுப் போறாங்க. உடல் நலம் குணமடையணும்னு வேண்டிக்கிறவங்களும், நல்லபடி ஆனதும் மனித சிலை செஞ்சு வைக்கிறாங்க” என்றார்.

கோயிலுக்குள் நாம் நுழைந்தபோது, தனது மனைவியுடன் கலிதீர்த்தானிடம் அருள்வாக்குக் கேட்டுக் கொண்டிருந்தார் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த என்.ஆறுமுகம். “கல்யாணமாகி மூணு வருசமாச்சு; குழந்தை இல்லை. இங்க வந்து குறிகேட்டா நல்லது நடக்கும்னு சொந்தக்காரங்க சொன்னாங்க. அதுதான் வந்துருக்கோம்” என்று நம்மிடம் சொன்ன அவருக்கு, ‘அடுத்த ஆண்டு ஆவணி மாதத்து வியாழக்கிழமையில் குழந்தை பிறக்கும்’ என்று நல்லவார்த்தை சொன்னார் கலிதீர்த்தான்.

வேதாரண்யத்திலிருந்து கைக்குழந்தையுடன் வந்திருந்த முத்துப்பிரியா, குழந்தையை கலிதீர்த்தானிடம் கொடுத்து ஆசிவாங்கினார். “போனவருசம் வந்திருந்தோம். ‘இன்னும் ஒரு வருசத்துல புதன்கிழமையில் சூரியப் பிறையில் குழந்தை பிறக்கும். அதுக்கு அருட்செல்வம்னு பேரு வையுங்க’ன்னு அப்பவே குறிச்சுக் குடுத்தாரு. அவரு சொன்னது போலவே, போன புதன்கிழமை குழந்தை பிறந்துச்சு. அதுதான் ஆசிவாங்க வந்தோம்” என்று பூரிப்புடன் சொன்னார் முத்துப்பிரியா.

பெயரையும் சொல்லிவிடுகிறார்

குழந்தைப் பிறக்கும் நாளைக் குறிப்பிடும்போதே அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார் கலிதீர்த்தான். குழந்தைக்காக அருள்வாக்கு கேட்க வருவோரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை ஒரு செம்பில் கரகம் போல் வைத்து வணங்கிவரச் சொல்கிறார். வரம் கிடைத்ததும் அந்தச் செம்பையும் தேங்காயையும் எடுத்துவந்து பூசாரியிடம் கொடுத்து விடுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்பட்ட செம்புகள் கோயில் வளாகத்தில் மலைபோல குவிந்துள்ளன. இதேபோல், நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு நிற்பவர்களுக்கும், திருமண நாளை தீர்க்கமாகச் சொல்லி அனுப்புகிறார் கலிதீர்த்தான்.

அய்யனாரிடம் வேண்டுதல் வைக்கும்போதே எனக்கு இந்தக் காரியம் கைகூடினால், ‘ஒரு நாள் பூஜை வைத்து, இரவு நாடகம் வைக்கிறேன்’ என்று வேண்டிக் கொள்கிறார்கள். அதுபடியே, வேண்டுதல் பலித்ததும் நாடகம் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். இப்படி, ஆண்டுக்கு ஐம்பது நாடகங்களுக்குக் குறையாமல் இங்கு நடக்கிறது.

அய்யனார் அருளோ, கலிதீர்த்தான் அருள் வாக்கு மகிமையோ தெரியாது.. ஆனால், மன பாரத்துடன் இங்கு வருவோரில் பலர், ஏதோ ஒருவிதத்தில் நிம்மதியுடன் வீடு திரும்புகிறார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்