தமிழகத்தில் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துக: வாசன்

By செய்திப்பிரிவு

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு மருத்துவச் சேவையை முறையாக, சரியாக தொடர்ந்து வழங்க வேண்டும். குறிப்பாக கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவச் சேவையை தங்கு, தடையின்றி அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பதோடு மருத்துவர்களும், செவிலியர்களும் போதிய அளவில், தொடர் பணியில் இருக்க வேண்டும்.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (NSSO) 60 ஆவது சுற்றின் படி (2004) தனியார் துறை சுமார் 80 சதவீதம் வெளிப்புற நோயாளிகளின் சேவையையும், சுமார் 60 சதவீதம் உள் நோயாளிகளின் சேவையையும் அளித்து வருகிறது. ஆனால் தனியார் துறையில் சுமார் 40 சதவீதம் தகுதியற்ற மருத்துவர்களால் மருத்துவச் சேவை அளிக்கப்படுகிறது என்று தேசிய மாதிரி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள மருத்துவர்களை மட்டுமே மருத்துவச் சேவையில் ஈடுபடுத்த உறுதியான தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1997ல் தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்ட மசோதா 14.02.1997 (The Tamil Nadu Private Clinical Establishments (Regulation) Act, 1997) அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை இச்சட்டத்திற்கான விதிகள் உருவாக்கப்படாமல், நடைமுறைப்படுத்தவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

மத்திய அரசு தேசிய, மாநில, மாவட்ட அளவில் மருத்துவ நிறுவனங்களின் மின்னணுப் பதிவை ஏற்படுத்தவும், போலி மருத்துவர்களின் செயல்பாட்டை குறைப்பதற்கு கட்டாயமாக பதிவு செய்தல், மருத்துவமனை, நர்சிங் ஹோம், தனியார் மருத்துவர்களின் கிளினிக் உட்பட அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் வசதிகள், சேவைகள், சிகிச்சை முறைகள், கட்டணம் குறித்து குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயிக்கும் நோக்கங்களுக்காக 2010 ஆம் ஆண்டு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் (Clinical Estabilshment (Regulation) Act, 2010) நிறைவேற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு இந்தியாவில் 10 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதர மாநிலங்களில் மாநில அரசால் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்துதல் சட்டம் மாநில அளவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சட்டம் இல்லாததால் மருத்துவ நெறிமுறைகள் மீறப்பட்டு, நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாநில அரசு கடந்த 20 ஆண்டுகளில் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தாததால் மருத்துவச் சேவையில் பொது மக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது மாநில அரசின் 1997 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்திற்கு உடனடியாக விதிகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்