கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் 24 மணி நேரம் அமர்ந்து இருந்தால்தான் மக்களின் கஷ்டம் புரியும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

By செய்திப்பிரிவு

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் 24 மணி நேரம் அமர்ந்து இருந்தால்தான் அவருக்கு மக்கள் படும் கஷ்டம் புரியும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொடுங்கையூர் எழில்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

1970-ம் ஆண்டு முதல் எழில் நகரில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். எங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கி யுள்ளார். எங்கள் குடியிருப்புக்கு அருகே மாநகராட்சி குப்பை கொட்டும் இடம் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. தற்போது எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து அந்த குப்பைக் கிடங்குக்கு சுற்றுச்சுவர் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. குப்பைகளை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் மோசமடைந்துள்ளது. எங்கள் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும், எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதற்கும் சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று நடந்தது. அப்போது விதிமுறைகளை மீறி குப்பைகளைக் கொட்டும் மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாட்டுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ‘‘குப்பை கொட்டும் பகுதிக்கு அருகே வசிக்கும் மக்கள் படும்பாடு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. சென்னை மாநக ராட்சி ஆணையர் அந்த குப்பைக் கிடங்கில் ஒரு நாற்காலி போட்டு 24 மணி நேரம் அமர்ந்திருந்தால்தான் அவருக்கு கஷ்டம் புரியும். வேண்டுமென்றால் ஒரு குடிசை வீடு போட்டுத் தருகிறோம்’’ என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையை பார்க்கும்போது கொடுங்கையூரில் குப்பை கொட்டும் பணியை சுற்றுச்சுழல் விதிகளுக்கு உட்பட்டு சென்னை மாநகராட்சி செய்யவில்லை. இந்த வழக்குகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் ஆயுள் தண்டனைகூட 14 ஆண்டுகள்தான். ஆனால், கொடூங்கையூர் குப்பை கொட்டும் இடத்தில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த 14 ஆண்டுகள் கூட போதவில்லை. 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிகள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது.

எனவே இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளில் எவையெல்லாம் அமல்படுத்தப்பட்டுள்ளன? எவை அமல்படுத்தப்படவில்லை? என்பது குறித்து விரிவான அட்டவணையை மாநகராட்சி அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

33 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்