வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம்: கடைசி நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளான செவ் வாய்க்கிழமை சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்களில் மக்கள் குவிந்திருந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் 25 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த 9-ம் தேதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் லட்சக்கணக்கானோர் மனு அளித்தனர். மற்ற நாட்களில் தாலுகா மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்தனர். பலர் ஆன்லைனிலும் விண்ணப்பித்தனர்.

சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர் தகவல் மையங்கள் இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள் தங்களின் பெயர்களை புதிதாக சேர்க்கவும் முகவரி திருத்தம் மேற்கொள்ளவும் இந்த மையங்களில் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்டனர்.

கடைசி நாளில் ஆர்வம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, மண்டல அலுவலகங்களில் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். பலர் அலுவலகங்களுக்கு விடுப்பு போட்டுவிட்டு வந்திருந்தனர். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் வாக்காளர் அட்டை பெறுவதற்காக பலர் வந்திருந்தனர்.

தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு வந்திருந்த விக்ரம் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் எனது வீட்டில் உள்ளவர்களின் பெயர், பட்டியலிலிருந்து விடுபட்டு விடுகிறது. எனவே புதிதாக சேர்க்க இந்த முறையும் விண்ணப்பம் கொடுக்க வந்துள்ளேன்” என்றார்.

அடையார் மண்டலத்துக்கு வந்திருந்த ராஜா கூறுகையில், “முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்திருந்தேன். எனது புதிய முகவரி பட்டியலில் இருந்தாலும் எனது தொகுதி மாற்றி பதிவிடப்பட்டுள்ளது” என்றார். புதிதாக பெயர் சேர்க்க வந்திருந்த கல்லூரி மாணவி அர்ச்சனா கூறுகையில், “இன்று கடைசி நாள் என்பதால் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து விண்ணப்பிக்க வந்துள்ளேன்” என்றார்.

தேர்தலுக்கு பிறகே வாக்காளர் அட்டை

ஒவ்வொரு நாளும் மண்டல அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் புதிய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டு போடலாம். வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதைக் காட்டி ஓட்டு போடலாம். தயாரான வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் துறையினர் வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர். விடுபட்டவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகே புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்