கே.வி.ராமலிங்கத்தின் அமைச்சர் பதவி பறிப்பு பின்னணி

By செய்திப்பிரிவு

அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக பதவி வகித்த கே.வி.ராமலிங்கத்தை அப்பதவியிலிருந்து ராஜிநாமா செய்யச் சொல்லி 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடச் செய்து, பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார் முதல்வர் ஜெயலலிதா.

அதன்பின், அமைச்ச ரவையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் ராமலிங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கானவராக திகழ்ந்த செங்கோட்டையனின் சரிவுக்கு பின், கட்சியில் ராம லிங்கத்தின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இறங்குமுகம் ஆரம்பம்

இவரது சொந்த ஊர் தாராபுரத்தை அடுத்த கள்ளிவலசு கிராமம். திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈரோடு மாநகர், மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்ததால் ஈரோட்டில் வீடு எடுத்து ராமலிங்கம் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம்

11-ம் தேதி முதல் ராமலிங்கத்தின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. கடந்த மாதம் 11-ம் தேதி கே.வி.ராமலிங்கத்தின் வசமிருந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனது வீட்டை அமைச்சர் ராமலிங்கமும், அவரது ஆதரவாளர்களும் மிரட்டி அபகரிக்க முயல்வதாக, ஈரோட்டை சேர்ந்த முத்துசாமி என்பவர் போலீசில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பான முழு விவரங்கள் உளவுத்துறையால் சேகரிக்கப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தள்ளிப்போனது

அப்போது, ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வந்ததால், இந்த விவகாரத்தில் உடனடியாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவாக ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், ஏற்காடு இடைத்தேர்தல் முடிந்த வுடன் ராமலிங்கத்தின் பதவி பறிக்கப்படும் என்றும் அந்த செய்தி யில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை உறுதிப்படுத்துவதுபோல ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும், அமைச்சர் ராமலிங்கம் வசமிருந்த கட்சியின் மாநகர், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. திங்கள்கிழமை அவரிடம் இருந்த அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. ராமலிங்கம் மீதான வீடு அபகரிப்பு புகார், ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், ராமலிங்கத்தின் நண்பருமான அப்பாதுரை மீதான இரு நில அபகரிப்பு புகார்கள் போன்றவை குறித்து உளவுத்துறை அளித்த அறிக்கைகளின் விளைவாகவே அவரது பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிழல் அமைச்சர்கள்

ராமலிங்கத்தின் பதவி பறிப்புக்குக் காரணமாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

ஈரோடு மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள இருவர், ஈரோட்டில் நிழல் அமைச்சர்களாக மாறியுள்ளனர். இவர்களது செயல்பாடுகளை அமைச்சராக இருந்த ராமலிங்கம் கண்டுகொள்வதில்லை என கட்சித் தலைமைக்கு பலமுறை புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் பரிந்துரையின் பேரில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு நெருக்கமான ஒருவருக்குக்கூட பதவி கிடைத்துள்ளது என்பது குறித்து போட்டோ ஆதாரத்துடன் கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் நவம்பர் முதல் வாரத்தில் உளவுத்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர்.

மணல் மாபியாவின் புகார்

சமீபத்தில், மணல் குவாரி இயக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றம் தெரிவித்த கண்டனத்தால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக மேல் நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதும் ராமலிங்கத்துக்கு எதிராக திரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஈரோட்டில் வீடு அபகரிப்பு குற்றச்சாட்டுத் தொடர்பாக மூத்த அமைச்சர் ஒருவரின் கவனத்துக்குச் சென்றது. அவர், ராமலிங்கத்தை அழைத்து இப்பிரச்சினையை சுமுகமாக முடிக்கச் சொல்லியும் அதை அலட்சியப்படுத்தியதால் போலீசில் புகார் என்ற நிலை ஏற்பட்டது. மேலும், மணல் விவகாரத்தில் கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்காதது குறித்து மணல் மாபியா ஒருவர் தலைமைக்கு நேரடியாக புகார் அளித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கோபம்தான் அமைச்சரவை பறிப்புக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

42 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்