ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உள்துறை செயலர், டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரையில் அலங்காநல்லூர் உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு உள்துறை செயலர், டிஜிபி பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. கனகவேல் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம், செல்லூர், பெரியார் பஸ் நிலையம் பகுதிகளில் மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அறவழியில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஜன 23-ல் போராட்டத்தை முடிக்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். அதற்கு போராட்டக்காரர்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் போலீஸார் கலைந்து செல்ல அவகாசம் வழங்காமல் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

அலங்காநல்லூரில் போலீஸ் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். பின்னர் பலரை போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துக்கொண்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தமுக்கம், பெரியார், செல்லூர் பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்களையும் போலீஸார் கடுமையாக தாக்கி விரட்டியடித்துள்ளனர். மதுரை தல்லாகுளம், செல்லூர், திலகர்திடல், அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர். இவர்களில் ஒரு சிலரைத் தான் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மதுரை சிறைக்கு முதன்மை மாவட்ட நீதிபதியை நேரில் அனுப்பி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், சட்டவிரோத காவலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்யவும், அலங்காநல்லூரில் நடைபெற்ற போலீஸ் தடியடி குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி வாதிடும்போது, இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்ய முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது 10 பஸ்களும், 3 போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் மதுரையில் சாலை மற்றும் ரயில் பாதைகளும் தடுக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் மூதாட்டி ஒருவரை போலீஸார் பலமாக தாக்கும் காட்சிகளை ஊடகங்களில் பார்த்தோம் என்றனர்.

தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடும்போது, போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் போலீஸாரே வாகனங்களை எரித்துள்ளனர் என்றார்.

இதையடுத்து இந்த மனுவுக்கு உள்துறை செயலர், டிஜிபி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப். 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

வணிகம்

9 mins ago

சினிமா

6 mins ago

உலகம்

28 mins ago

வணிகம்

34 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்