பெரிய கட்டிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?- பேரிடர் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் அறிவுரை

தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற அவசர காலங்களில் பேரிடர் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள பெரிய கட்டிடங்களில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற வசதிகளை கொண்டுவர வேண்டுமென பேரிடர் மேலாண்மைத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ள னர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், நேற்று முன்தினம் அதிகாலையில் தீ பிடித்தது. அந்தத் தீ, ஏழு மாடிக்கும் பரவியதால், கட்டிடமே பாழான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி மேற்கொள்ள..

சென்னை பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைத் துறையின் தலைவர் வி.மாதவ சுரேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரிய, பெரிய கட்டிடங்கள் மாநகரங்களில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில்தான் கட்டுவார்கள். அதற்கு ஏற்றார்போல் போக்குவரத்து வசதியும் மேம்படுத்தப்படும். ஆனால், இங்கு குறுகிய இடத்தில் கோபுரம் போன்று கட்டிடங்களை எழுப்புகின்றனர். இதனால், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணி என்பது கடும் சவாலாக இருக்கிறது.

பெரிய கட்டிடங்கள் கட்டும்போது அருகில் சுமார் 10 மீட்டர் இடைவெளி விட்டு கட்ட வேண்டும். அப்போதுதான் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதுபோல், கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் புகையை வெளியிடுவதை கண்டறிந்து எச்சரிக்கும் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும். இந்த கருவிகள் சரியாக இருக்கிறதா? என 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும். கட்டிடத்தில் உள்ள அவசர காலக் கதவுகள், வெளியே செல்லும் வழிகள் எங்கெங்கு இருக்கிறது என்பது குறித்து வரைபடங்கள் இடம்பெற வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒரு முறை பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும். அப்போதுதான் அங்குள்ள பணியாளர்களுக்கே பாதுகாப்பு குறித்து முழுமையான பயிற்சியை தர முடியும். தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற அவசர காலங்களில் பேரிடர் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற வசதிகள் இருக்க வேண்டும். அவசரகாலத்துக்கு பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக பெரிய தொட்டி அமைத்து எப்போதும், தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்றார்.

மின்கசிவை தவிர்ப்பது எப்படி?

தியாகராயநகரில் ஏழு மாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மின்கசிவு தீ விபத்தை தடுப்பது குறித்து மின் ஆய்வுத்துறை வல்லுநர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

அதிக வெப்பம் ஏற்படுதல் மற்றும் சரியாக பராமரிக்காமல் இருக்கும்போது மின்வயர்கள் மூலம் தீப்பொறி ஏற்படுகிறது. கட்டிடம் திறந்து 10 ஆண்டுகளுக்கு எந்த மின் ஆய்வும் தேவையில்லை. அதன்பிறகு உரிமம் பெற்றுள்ள வயர்மேன் மூலம் மின்ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண் டும். மின்சாதனப் பொருட்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.

பெரிய கட்டிடங்களில் மின்விசிறி, ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்தும்போது லேசாக ‘ஷாக்’ அடித்தால் உடனடியாக மின்காப்பு திறன் மூலம் வயர்களின் பாதுகாப்பு தன்மையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதாவது, மின்சாரம் பயன்பாட்டை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீட்டர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பயன்பாட்டுக்கு வரும் மெயின் வயர்களில் ‘மெக்கர்’ என்ற சிறிய கருவி கொண்டு வயர்மேன்கள் மூலம் பரிசோதிக்கலாம். இதன்மூலம் மின்சார வயர்கள் சேதமடைந்திருந்தால் உடனடியாக தெரிந்து கொண்டு சரிசெய்யலாம் என்றனர்.

வெளிபுறத்தில் படிக்கட்டுகள்

இந்திய கட்டுமான சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ‘தி இந்து’ விடம் கூறுகையில், ‘‘தேசிய கட்டிட விதிகளின்படி பொதுமக்கள் பயன்படுத்தும் அடுக்குமாடி கட்டிடங்களில் ஒரு தளத்துக்கும் மற்றொரு தளத்துக்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும்.

கட்டிடத்துக்குள் தீயணைக்கும் உபகரணங்கள், தீயை அணைப்பதற்கான வசதிகள் செய்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் எளிதாக சென்றுவர கட்டிடத்துக்குள் அகலமான படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதி இருக்க வேண்டும். முக்கியமாக கட்டிடத்தின் வெளிப்புறம் படிக்கட்டுகள் அமைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு தளத்தில் இருந்தும் வெளிப்புறப் படிக்கட்டுக்கும் செல்ல வழி இருக்க வேண்டும். அப்போதுதான் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள், அந்த அவசர வழி மூலம் வெளியேற முடியும். அந்த வழியாக தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்க முடியும். விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், அந்த கட்டிடத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

30 secs ago

சினிமா

18 mins ago

தமிழகம்

36 mins ago

க்ரைம்

43 mins ago

வணிகம்

47 mins ago

சினிமா

44 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்