60 ஏழை மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்திருக்கும் ‘முகவரி’: ஒரு சாமானியரின் சாதனை பயணம்

By குள.சண்முகசுந்தரம்

திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்துவிடும் போலிருந்தது.

இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு ஊக்கம் கொடுத்து எனது செலவில் கோச்சிங் கொடுத்து நுழைவுத் தேர்வை எழுத வைத்தேன். மாநிலத்திலேயே 3-வது ‘ரேங்க்’ எடுத்தார் கஸ்தூரி. அடுத்து, கல்லூரியில் சேர்க்க பணம் தேவைப்பட்டது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக சினிமா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். கஸ்தூரி மருத்துவப் படிப்பை முடிப்பதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். அதன்படியே முருகதாஸின் உதவியால் கஸ்தூரி மருத்துவரானார்’’ என்கிறார் சாமானியராக இருந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘முகவரி’ ரமேஷ்.

கஸ்தூரி விவகாரத்தில் கிடைத்த தன்னம்பிக்கையால் அடுத்தடுத்த வருடங்களிலும் தயாள உள்ளங்களின் தயவில் தனது ஊரின் ஏழைப் பிள்ளைகள் சிலரை மேல்படிப்புக்கு அனுப்பினார் ரமேஷ். இதையே இன்னும் கொஞ்சம் விசாலமாக்க வேண்டும் என்பதற்காக 2006-ல், அப்துல்கலாம் பிறந்த நாளில் ‘முகவரி’ என்ற அமைப்பை தொடங்கினார். அடுத்தடுத்த வருடங்களில் ‘முகவரி’யால் தங்களை உயர்த்திக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக வளர்ந்தது.

கடந்த 14 வருடங்களில் 300 பேருக்கு உயர்கல்வி தந்தும், தந்து கொண்டும் இருக்கிறது ‘முகவரி’. இவர்களில் 42 பேர் பணியில் இருக்கிறார்கள். இதுவரை 3 மருத்துவர்களை உருவாக்கி இருக்கும் இந்த அமைப்பு, 2 பேரை இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சியும் அடைய வைத்திருக்கிறது. ‘முகவரி’யின் முயற்சியில் 60 மாணவர்கள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் 25 பேர் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“கல்விக்கு உதவும் பட்டியலில் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் முன்னுரிமை வைத்திருக்கிறோம். தொடக்க ஆண்டுகளில் எங்களின் பணிகளைப் பார்த்துவிட்டு மேலும் பலர் எங்கள் முயற்சிக்கு உதவ முன் வந்தார்கள். அப்படித்தான் சேலம் தொழிலதிபர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன் 18 மாணவர்களும், சென்னையில் பள்ளிக்கூடம் நடத்தும் கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் 21 மாணவர்களும், இயக்குநர் முருகதாஸின் உதவியுடன் 9 மாணவர்களும் உயர்கல்வி படித்துக் கொண்டிருக் கிறார்கள்.

இந்த மூவரையும் சேர்த்து மொத்தம் 230 கொடையாளர்கள் எங்களின் முயற்சிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். 2007-ல் சென்னையில் எங்கள் மாணவர்கள் 20 பேர் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்த சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இப்போதும் 30 மாணவர்களுக்கு தங்குமிடமும் உணவும் தந்து உதவிக் கொண்டிருக்கிறார். இவர்கள் அத்தனை பேரின் கருணையால்தான் எங்களால் இத்தனை மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்ப முடிந்திருக்கிறது’’ என்று சொல்லும் ரமேஷ், “ஏழைகளுக்காக நேர்மையாக பணி செய்யும் அதிகாரிகளையும் மனிதாபிமானத்துடனும் கருணையுட னும் சேவை செய்யும் மருத்துவர் களையும் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது லட்சியம்” என்கிறார். அவரது தொடர்பு எண்: 98400 30942.

‘முகவரி’யால் முன்னேறியவர்களின் உதவி

‘முகவரி’யால் உயர் கல்வி முடித்து பணியில் சேர்ந்தவர்கள் ‘வானவில்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தங்களது ஊதியத்தில் 7 சதவீதத்தை ‘வானவில்’லுக்கு கொடையாகத் தருகிறார்கள். இதைக் கொண்டு ‘வானவில்’லும் தற்போது 7 மாணவர்களை உயர் கல்வி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

4 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

30 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்