ஜல்லிக்கட்டு நடத்துவதில் அலட்சியம் காட்டினால் மாணவர் போராட்டம் வெடிக்கும்: மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குவதில் தொடர் அலட்சியம் காட்டினால் மாணவர்களின் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், "தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், அதேபோல மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில் மாநில அரசையும் கேட்டுக் கொள்ளும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு கட்சிகளின் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தக்கூடிய வீரர்களின் அமைப்புகள் சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்துவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்தியில் இணை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணனும், அதேபோல தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கக்கூடிய தமிழிசை சவுந்திரராஜனும் பத்திரிகையாளர்களிடத்தில் பதில் சொல்கின்றபோது, நிச்சயமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், உறுதியாக நடைபெறும் என்று தொடர்ந்து, ஏறக்குறைய சென்ற ஆண்டிலிருந்து இந்த நிமிடம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

அண்மையில் கடந்த 10, 15 நாட்களாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் கிளர்ந்தெழுந்து, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை பேரணியாக, சாலை மறியலாக, ஆர்ப்பாட்டங்களாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக்கூடிய இந்தக் காட்சிகளை பார்க்கின்றபோது, எனக்கு நினைவுக்கு வருவது, நமது தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், 1965 ஆம் ஆண்டும் நம்முடைய மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, அந்தப் போராட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகி இருக்கின்றது.

ஆகவே, இப்போது மாணவர்கள் இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, இதற்குரிய அனுமதியை தர வேண்டும் என்று போராடும் காட்சியை பார்க்கின்றபோது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். அதேநேரத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்காக எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, புதுக் கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய பாராட்டையும், நன்றியையும், எனது ஆதரவையும் தெரிவிப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வலியுறுத்த விரும்புவது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். அப்படி மாணவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று சொன்னால், நிச்சயமாக நான் கூறுகிறேன், இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகத்தான் இது அமைந்திட முடியும் என்று எச்சரிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என சில கட்சிகள் தெரிவித்து இருக்கின்றன. ஒருவேளை அனுமதி வழங்கப் படவில்லை என்றால் திமுக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துமா என்ற கேள்விக்கு, "இன்றைக்கு மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக் கூடிய காட்சிகளை பார்க்கின்றபோது, நிச்சயமாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இல்லையென்று சொன்னால், திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோருடனும் கலந்து பேசி, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதா அல்லது திமுக சார்பில் நடத்துவதா என்பதை அறிவிப்போம்" எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்