தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.

நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.

இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.

முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

துண்டுப்பிரசுரம், குறும்படம்

ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

37 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

35 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்