தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை ஆக முடியாமல் சிறைகளில் ஏராளமானோர் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆதரவற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதிமன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும்,கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.

விஜயாவைப் போலவே ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை ஆக முடியாமல் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தென்தமிழன் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் வாடிக்கொண்டிருகிறார். குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது.

ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்த பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சிறையில் தவறி விழுந்து எழும்பு முறிந்த நிலையில் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

தன்னுணர்வற்ற நிலையில் உள்ள அவரை, மனிதாபிமானம் இல்லாமல் சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து காவல்துறையினர் கொடுமைப்படுத்துகின்றனர். அவரை விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை என்பதால், அவரை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்யும்படி கடந்த 2009 - ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போதைய அரசு தென்தமிழனை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவாகவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச் சந்திரன் ஆகியோரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாத ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தங்களின் எதிர்காலத்தை இழந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 662 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டில் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், 5 ஆண்டு தண்டனை முடித்த 60 வயதைக் கடந்த கைதிகள் என 744 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அப்போது கூட பல்வேறு காரணங்களைக் கூறி, இவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களில் நளினி உள்ளிட்ட பலரை விடுதலை செய்வது குறித்து ஆலோசனைக் குழுவை அமைத்து முடிவெடுக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், சொத்தைக் காரணங்களைக் கூறி இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது. உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், இவர்களில் பலரும் விஜயாவைப் போன்றும், தென்தமிழனைப் போன்றும் மனநலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

சிறைகள் கைதிகளை திருத்துவதற்கான சீர்திருத்தக் கூடங்களாக இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாக இருக்கக் கூடாது. மேலும் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்வதால், சமுதாய அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

எனவே, அவர்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில், பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை வரும் புத்தாண்டையொட்டி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

35 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

59 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்