அநாகரிக அரசியல் தேவையா?- அதிமுகவுக்கு கே.என்.நேரு கண்டனம்

By செய்திப்பிரிவு

ஆக்கபூர்வமான திமுக பணிகளிலும் அநாகரிகமாக அரசியல் செய்து பிழைப்பு நடத்த அதிமுக அரசு முன்வரக்கூடாது என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படும் பணிகளுக்கு ஆங்காங்கே மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாத 'பினாமி' அதிமுக அரசு திருச்சியில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் மூலமாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

திருச்சி தென்னூரில் உள்ள அருள்மிகு பெரியநாச்சியம்மன் கோயில் குளத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தூர் வாரி அந்தப் பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் திருச்சிக்கே நேரில் வந்து பார்வையிட்டு கழக தொண்டர்களுக்கு இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதற்கு பெருமளவில் ஊக்கமளித்த ஸ்டாலினைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ள அதிமுக அரசு "அறநிலையத்துறை மூலம் அந்த குளத்தை ஏற்கனவே தூர்வாரி விட்டதாக" ஒரு பொய் தகவலை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அறநிலையத்துறை மற்றும் அதிமுக அரசின் இந்த கேடுகெட்ட செயலைப் பார்த்து தென்னூர் மக்கள் மட்டுல்ல- திருச்சி மாநகர மக்களே எள்ளி நகையாடுகிறார்கள்.

77 வருடங்களுக்கும் மேலாக தூர்வாராமல் கிடந்த அந்தக் குளத்தை அறநிலையத்துறையும் கண்டுகொள்ளவில்லை. அதிமுக அரசும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

தளபதி அவர்களின் ஆணைக்குப் பிறகு அந்தக் குளத்தை தேடிக் கண்டிபிடித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் அனுமதியும் பெற்று இந்த தூர் வாரும் பணியை மேற்கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மட்டுமின்றி, அதற்கு பயன்படுத்திய ஜே.சி.பி. உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் திராவிட முன்னேற்றக் கழகமே செய்தது என்பதை அப்பகுதி மக்கள் நன்கு உணருவார்கள். கோயில் நிர்வாகிகளும் அறிவார்கள். குளம் தூர் வாரும் வரை அமைதியாக இருந்து விட்டு திடீரென்று விழித்துக் கொண்ட அதிமுக அரசு திருச்சி மண்டல அறநிலைத்துறை இணை ஆணையரை தூண்டி விட்டு, கோயில் நிர்வாகிகளை மிரட்டியிருப்பது அநாகரிகமான செயல்.

"குளத்தை நாங்கள் தூர்வரினோம் என்று கூறுங்கள். இல்லையென்றால் கோயிலை அரசே எடுத்துக் கொள்ளும்" என்று அந்த நிர்வாகிகளை அச்சுறுத்தியிருப்பது இந்த ஆட்சியின் அலங்கோலமான நிர்வாகத்தின் வெட்கங்கெட்ட அடையாளமாக இருப்பதைப் பார்த்து திருச்சி மாநகர மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூர் வாரும் பணியைப் பயன்படுத்தி அருள்மிகு பெரியநாச்சியம்மன் கோயில் குளத்தை அறநிலையத்துறைதான் தூர் வாரியது என்று கணக்குக் காட்டுவதற்காக இப்படியொரு நாடகத்தை திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையர் செய்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமல்ல- இப்போது தூர் வாரி விட்டதாக கூறும் அதிமுக அரசு அறநிலையத்துறையின் சார்பில் அந்தப் பணிகளுக்குப் பயன்படுத்திய ஜே.சி.பி.க்கள் எத்தனை? எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? அந்த நிதிக்கு எப்போது அனுமதி கொடுக்கப்பட்டது?

கடந்த 77 வருடங்களில் எத்தனை முறை இந்த குளத்தை அறநிலையத்துறை தூர்வாரியிருக்கிறது? என்ற விவரங்களை வெளியிட அதிமுக அரசு தயாரா என்று சவால் விடுகிறேன்.

இத்தனை வருடங்களாக வேடிக்கை பார்த்து விட்டு திடீரென்று அறிக்கை விட்டு அடுத்தவர் உழைப்புக்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதன் உள்நோக்கம் என்ன? என்று கேட்க விரும்புகிறேன். இந்த கேள்விகளுக்கு எல்லாம் அறநிலையத்துறை அமைச்சரோ, திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையரோ விளக்கம் அளிக்கத் தயாரா அல்லது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பொது மன்றத்தில் வைக்க தயாரா?

விவசாயிகள் நலன், குடிநீர் தேவை, மழை நீரை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தளபதி அவர்கள் மாநிலம் முழுவதும் குளங்களை தூர்வாரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு ஆணையிட்டிருக்கிறார்.

அதன்படி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பணிகளில் ஈடுபடும் போது தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியாத 'பினாமி' அதிமுக அரசு, தி.மு.க.வினரை சீண்டும் இது போன்ற வீண் விளையாட்டுகளில் ஈடுபடாமல், முடிந்தால் அரசு சார்பில் அனைத்து குளங்களையும் ஏரிகளையும் தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான திமுக பணிகளிலும் அநாகரிகமாக அரசியல் செய்து பிழைப்பு நடத்த அதிமுக அரசு முன்வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 mins ago

இந்தியா

7 mins ago

சினிமா

13 mins ago

ஓடிடி களம்

45 mins ago

கல்வி

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்