ஆந்திர மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'ஹுட்ஹுட்' புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உதவிகளை செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை அளிப்பதிலும் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னால் அது மிகையாகாது.

அண்மையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களுக்காக 5 கோடி ரூபாய் நிவாரண உதவியை கேட்காமலேயே வழங்கியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

வங்கக் கடலில் அண்மையில் உருவான 'ஹுட்ஹுட்' புயல், அதிதீவிரமடைந்து நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்று காரணமாக, ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் அடியோடு சாய்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின் உபகரணங்களை அனுப்பி உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

உதவி என்றால் ஓடோடி செய்யும் குணம் படைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால், ஆந்திர மாநில மக்களுக்கு எந்ததெந்த விதங்களில் உதவி செய்யலாம் என்பது குறித்த ஓர் ஆய்வுக் கூட்டம் இன்று (13.10.2014) நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அரசு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, கீழ்க்காணும் உதவிகளை மேற்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதன் விவரம்:

1) 'ஹுட்ஹுட்' புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கும், ஆந்திர அரசுக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில், ஒரு நல்லெண்ணத்தின் அடையாளமாக, ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

2) ஆந்திர மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மின் கட்டமைப்புகளை சீரமைக்கும் பொருட்டு, 100 மின்மாற்றிகள், 5,000 மின் கம்பங்கள், 10,000 இன்சுலேட்டர்கள் மற்றும் இதர மின் உபகரணங்கள் அளிக்கப்படும். இவை ஆந்திர மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

3) ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை உடனடியாக களைய உதவிடும் வகையில், முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பொறியாளர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பி வைக்கப்படும். இந்த மீட்புக் குழு மின் ரம்பங்கள் மற்றும் அதற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் இதர தளவாளங்களுடன் சென்று சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை விரைவில் திரும்ப உதவி புரியும்" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்