காவிரி நீரையும் தமிழர் பாதுகாப்பையும் உறுதி செய்க: அன்புமணி

By செய்திப்பிரிவு

கர்நாடகத்தில் நிலவும் பதற்றமான சூழலால் அங்குள்ள தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தைப் போக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கர்நாடக அரசின் இப்போக்கு கண்டிக்கத்தக்கது.

சம்பா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தவறி விட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால் தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நிமிடமே காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். எத்தனை ஆலோசனை நடத்தினாலும், இத்தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், நேற்று அமைச்சரவைக் கூட்டம், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று காலங்கடத்தும் நடவடிக்கைகளில் தான் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஈடுபட்டிருக்கிறாரே தவிர, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தத் தயாராக இல்லை. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

காவிரிப் பிரச்சினையில் கடந்தகால வரலாற்றை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா நினைவில் கொள்ள வேண்டும். 2002 ஆம் ஆண்டில் காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட போது, அதை செயல்படுத்த கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்தார். இதற்காக அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரை தண்டிக்கப் போவதாகவும் எச்சரித்தது. இதையடுத்து 28.10.2002 அன்று உச்ச நீதிமன்றத்திடம் கிருஷ்ணா மன்னிப்பு கேட்டார். அதுபோன்ற நிலைக்கு சித்தராமய்யா இடம் தராமல் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

மற்றொரு புறம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது; தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக வரும் வெள்ளிக்கிழமையன்று கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்தை நடத்த அங்குள்ள விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 1991ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாய அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் தான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக உருவெடுத்தது. அதில் தமிழர்கள் உயிர்களையும், உடமைகளையும் பெருமளவில் இழந்து தமிழகத்திற்கு தப்பி வந்தனர்.

அதேபோன்ற சூழல் இப்போதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் காவிரிப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்; நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்து விடும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது கேட்டுக்கொண்டேன். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் விட ஆணையிட்டிருக்கிறது. இதுவே பதற்றத்திற்கான காரணமாகவும் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் நிலவும் பதற்றமான சூழலால் அங்குள்ள தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தைப் போக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அது சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி இன்றுவரை தமிழகத்திற்கு கர்நாடகம் 102 டி.எம்.சி தண்ணீரை வழங்கியிருக்க வேண்டிய நிலையில், 20 டி.எம்.சிக்கும் குறைவாகவே கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. மீதமுள்ள 82 டி.எம்.சி நீரில் 50 டி.எம்.சியையாவது அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கும்படி கர்நாடகத்திற்கு நரேந்திர மோடி ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் அமைப்பதும் தான் என்பதால் அதற்கான நடவடிக்கையையும் பிரதமர் எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும், விவசாயிகள் அமைப்புகளையும் ஒருகுடைக்குள் கொண்டு வந்து மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் அணுகுமுறை கவலையளிக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் இருமுறை அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அதுகுறித்து குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த போக்கு ஒருபோதும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது.

எனவே, முதல்வர் ஜெயலலிதா கவுரவம் பார்க்காமல் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகி குறைந்தபட்சம் 50 டி.எம்.சி நீர் பெறுவது குறித்து விவாதிக்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, நதி நீர் சிக்கல்கள் குறித்த விவகாரங்களில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நிரந்தரக்குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

59 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்