நியூட்ரினோ ஆய்வு திட்டம் பினராயி விஜயனுக்கு வைகோ கடிதம்

By செய்திப்பிரிவு

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கான தடையில்லா சான்றிதழை கேரள அரசு வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை புழல் சிறையில் இருந்து அவர் எழுதியுள்ள கடிதம்

”அன்புள்ள திரு பினராயி விஜயன் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் நலமே விழைகின்றேன். கடந்த மார்ச் 8 ஆம் நாள் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் நான் தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்னை புழல் மத்தியச் சிறையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களை ஆதரித்துப் பேசியதற்காக, இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 124 (ஏ), 153 (1) கீழ் என் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கில், விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளேன். சிறை வாழ்க்கை எனக்குப் பழக்கமான ஒன்றுதான்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், கேரள எல்லைக்கு 2 கிலோ மீட்டர் அருகில் மத்திய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் குறித்துத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

இது தொடர்பாக நான் தங்களிடம் நேரில் வழங்கிய கோரிக்கை மனுவை நினைவூட்ட விழைகின்றேன்.

இந்த ஆய்வுக்கூடம், இடுக்கி, முல்லைப்பெரியாறு ஆகிய இரண்டு அணைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பல நீராதாரங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். கேரள முன்னாள் முதல்வர் தோழர் அச்சுதானந்தன் அவர்கள், இந்தத் திட்டத்தைத் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகின்றார்கள்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் சென்னைக் கிளையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகத் தடை ஆணை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட அரிய காட்டுயிர்கள் வசிக்கின்ற இந்தப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்குக் கேரள அரசின் தடை இல்லாச் சான்றிதழைப் பெறுகின்ற முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்படுமானால், இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பல நீராதாரங்களுக்கும் பெருங்கேடு விளையும்.

மேற்குத் தொடர்ச்சி மலை, உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்குக் கேரள அரசின் வனத்துறை தடை இல்லாச் சான்றிதழ் வழங்குவதைத் தடுத்து நிறுத்துமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

தங்களை நேரில் சந்தித்தபோது வழங்கிய கோரிக்கை விண்ணப்பத்தில் இது தொடர்பாக விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்