வறட்சிக்காக கூடுதல் நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தகுந்த அழுத்தம் தர வேண்டும்: வாசன்

By செய்திப்பிரிவு

வறட்சிக்காக கூடுதல் நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தகுந்த அழுத்தம் தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக போதிய மழையின்மை, கடும் வறட்சி, இயற்கைச் சீற்றம், அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காதது, மாநில அரசு நீர் ஆதாரத்தை சேமிக்க, பாதுகாக்க தவறியது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்காதது, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, விவசாயக்கடனை வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழில் படிப்படியாக நலிவடைந்து கொண்டே போகிறது.

இவ்வாறு விவசாயத்தொழில் பெரும்பாதிப்புக்குள்ளானதால் விவசாயிகள் மனம் உடைந்தும், அதிர்ச்சிக்குள்ளாகியும், வருத்திக்கொண்டும் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளே.

இத்தகைய சூழலில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் தொடர்சியாக தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த மத்தியக்குழு, தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இத்தொகை மிக மிக குறைவு.

இந்நிலையில் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி தமிழக வறட்சிக்கு நிவாரணமாக ரூ.1,748.28 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தொகை போதுமானதல்ல. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொருளாதாரமின்றி பெரும் சிரமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு மேலும் மன வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் விவசாய வர்க்கமே வஞ்சிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை பாராமுகமாக, ஓரவஞ்சனையோடு பார்க்கிறது என்பதற்கான அறிவிப்பாகவே இந்த நிவாரணத் தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மத்தியக்குழு முறையாக, முழுமையாக தமிழக வறட்சிப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்களா மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் ஆகியோரின் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதெல்லாம் கேள்விக்குறியே. இதற்கெல்லாம் தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டு மத்திய அரசிடம் கண்டிப்போடு முறையிட வேண்டும்.

மேலும் தமிழக வறட்சிக்கு மத்திய அமைச்சர் தற்போது அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1,748.28 கோடி போதுமானதல்ல என்றும் ஏற்கெனவே கேட்கப்பட்ட ரூ.39,565 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக வறட்சிக்காக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனவே, தமிழக வறட்சிக்காக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு முழு தொகையையும் காலம் தாழ்த்தாமல் வழங்கி தமிழக விவசாயிகள், பொது மக்கள் ஆகியோர் நலன் காக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்