ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில்,

''வேலியே பயிரை மேய்வதைப் போல உழவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே உழவர்களின் பணத்தை மோசடி செய்திருப்பதால் திருவண்ணாமலை மாவட்ட உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட உழவர்கள் பலமுறை முறையீடு செய்தும் அவர்கள் வழங்கிய விளைபொருட்களுக்கு விலையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டதாகும். தமிழகத்தில் அதிக அளவில் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இது மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்கப்படும் பணத்திற்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் தங்களின் விளைபொருட்களை அங்குதான் விற்பனை செய்வார்கள்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 292 உழவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.50 கோடியை தராமல் விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் இராஜசேகரனும், மொத்த வணிகர் கார்த்தி என்பவரும் மோசடி செய்து விட்டனர். அதாவது உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு பணம் கொடுக்காமலேயே கொடுத்ததாகக் கணக்குக் காட்டி, அந்தப் பொருட்களை வணிகர் கார்த்தி கொண்டு சென்று வேறு வணிகர்களிடம் விற்பனை செய்து விட்டார்.

இந்த மோசடிக்கு இராஜசேகரன் துணையாக இருந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்க முடியவில்லை. தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உழவர்கள் கூறி விட்டதால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

இதனால் சேத்துப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த உழவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உழவர்கள் தங்களின் விளைப்பொருட்களை 30 கி.மீ தொலைவில் உள்ள வேறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் கூடுதல் செலவும், நேர இழப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசோ, ஆளுங்கட்சியினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் நடத்திய குறைதீர்ப்புக் கூட்டத்தில் உழவர்கள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று விற்பனைக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரே ஆணையிட்ட பிறகும், அதை விற்பனைக்கூடத்தின் செயலாளர் மாரியப்பன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை 30 நாட்களில் வழங்குவதாக உறுதியளித்தும், அதை நிறைவேற்றவில்லை. இதனால் உழவர்களின் துயரம் தொடருகிறது.

அதுமட்டுமின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் எடைப் பணியாளர்கள், சுமைப் பணியாளர்கள் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்கள் கடந்த 5 மாதங்களாக வேலை வாய்ப்பின்றியும், ஊதியமின்றியும் வாடுகின்றனர். குடும்பச் செலவுகளுக்கும், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பணம் இல்லாமல் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் கிடைக்காத மன உளைச்சலில் கோட்டுப்பாக்கம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்த இரு உழவர்கள் உயிரிழந்து விட்டனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்படாததால் அதன் பணியாளர்களின் துயரமும், பணம் வழங்கப் படாததால் 292 உழவர்கள் குடும்பங்களின் துயரமும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் எதிரொலி மணியன் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் குழு, தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர்ட் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக ஆணையர் சுன்னோங்கம் ஜடாக் சிரு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து பேசியது. அப்போது மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் மாரியப்பன் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் உழவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்பிறகும் அதற்கு ஏற்பாடு செய்ய மாரியப்பன் மறுத்து வருகிறார். இதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆண்டுக்கு ரூ.150 கோடி அளவுக்கு வணிகம் செய்கிறது. தமிழக அரசும், விற்பனைக்கூட அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, உழவர்களுக்கு நிலுவைத் தொகையும், பணியாளர்களுக்கு வேலையும் கிடைக்க வகை செய்ய வேண்டும். மேலும் முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் திறந்து செயல்பட வைக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

5 mins ago

இந்தியா

58 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்