அட்டப்பாடி தேக்குவட்டை கிராமம்: பவானியில் தடுப்பணை பணியை தொடங்கியது கேரளம்

புயலை கிளப்பும் தமிழக-கேரள அரசியல்



அதோ இதோ என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த கேரள அரசு அட்டப்பாடி, தேக்குவட்டை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கில் தடுப்பணை கட்டும் பணியில் இறங்கியுள்ளது. தமிழக-கேரள அரசியலில் மீண்டும் புயலைக்கிளப்பும் விவகாரமாக இது மாறியிருக்கிறது.

தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியும், கேரளத்தின் நிலம்பூர் வனப்பகுதியும் இணையும் எல்லைப்பகுதியான அங்கந்தா எனப்படும் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, நீலகிரி மாவட்ட காடுகளில் 3 கிமீ தூரம் பயணித்து கேரள வனப்பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடி பிரதேசத்ததில் உள்ள சைலண்ட் வேலிக்கு வருகிறது. இங்கு பல கிளைகளாக பிரியும் பவானி நதியின் உயிர்முடிச்சு கிட்டத்தட்ட 24 கிமீ கடந்து முக்காலி கிராமத்தை அடைகிறது.

இந்த முக்காலி கிராமத்துக்கு கிழக்கே சுமார் 24 கிமீ தூரம்தான் தமிழகப்பகுதியான ஆனைகட்டி. முக்காலியிலிருந்து வடகிழக்கே நகரும் பவானி அட்டப்பாடியில் 35 கிமீ தூரம் வளைந்து நெளிந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை பசுமையாக்கிவிட்டு தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இதில் கோவைக்கு தென்மேற்கே கோவை குற்றாலம் அருகே முத்திக்குளம் (முக்காலிக்கு தென்கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவில்) பகுதியில் பல்வேறு நீரோடைகளின் மூலம் உருவாகும் சிறுவாணி கேரள காடுகளில் (இதுவும் அட்டப்பாடி பிரதேசம்தான்) கோவையின் நீர்த்தேவைக்குரிய சிறுவாணி அணையில் நிரம்பிவிட்டு அதன் உபரி நீர் நேரே வடக்கு நோக்கி கிளை விரிக்கிறது. இது வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லே பள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்களை சுமார் 25 கிமீ கடந்து கூட்டப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் கலக்கிறது.

இப்படி சிறுவாணியை சேர்த்துக் கொண்டு பவானி மேலும் சுமார் 10 கிமீ பயணித்து தமிழகத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது. இதில் அட்டப்பாடி முக்காலி பகுதியில் 2003-ல் பல்வேறு தடுப்பணைகளை கட்டத்திட்டமிட்டது கேரள அரசு. முக்காலியில் அணைகள் கட்டினால் தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீரே வராது என்று சர்ச்சை கிளப்பிய விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் எடுத்ததன் விளைவு அந்தப்பணிகள் தடுத்து நிறுது்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் 2012-ல் திரும்ப தூசி தட்டப்பட்டது. சிறுவாணிக்கு குறுக்காக சித்தூர் என்ற இடத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட அணையை கட்ட திட்டமிட்டது கேரள அரசு. சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டி எம்சி தண்ணீரை எடுக்க திட்டமிட்டு அதற்கு நிதியும் அறிவித்தது. அதற்கு எதிராகவும் தமிழகத்தில் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடித்தன.

இறுதியில் சிறுவாணி நதி ஓரங்களில் அணைகட்ட சின்ன ஆய்வைக்கூட செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு கடந்த ஆண்டும் சிறுவாணி, சித்தூரில் அணைகட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று, அணைகட்ட ஆய்வுப்பணிகளை தொடங்கியது. அதற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு, போராட்டங்கள். அதனால் இந்த விவகாரம் நீருபூத்த நெருப்பாக இருந்தது. இவை விரிவான கட்டுரைகளாக ‘தி இந்து’-வில் தொடர்ந்து அப்போது வெளியானது. தற்போது சிறுவாணி அணை கிடக்கட்டும் என்று முக்காலிக்கு கீழே தேக்குவட்டை என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தடுப்பணைகட்டும் பணியில் இறங்கியுள்ளது கேரள அரசு.

இந்த தகவல்கள் நேற்று தெரியவந்து கோவை பெரியார் திராவிடர்கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் தன் குழுவினரோடு சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார். ‘தற்போது தமிழத்தில் நிலவும் அரசியல் சூழல்களை கருத்தில் எடுத்துக் கொண்டு சுலபமாக அணையை கட்டிவிடலாம் என்றே கேரள அரசு இச்செயலில் இறங்கியுள்ளது. இதை அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்திட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்துள்ளார். மதிமுக இளைஞரணி பொதுச்செயலாளர் வே. ஈஸ்வரன் கேரள அரசின் இந்த செயலை கண்டித்து இன்று (ஜன.17) கேரள எல்லைப்பகுதி காக்கா சாவடியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கோவை- கேரள எல்லைப்பகுதிகள் மீண்டும் பதற்றத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது. தற்போது தடுப்பணை கட்டப்படும் தேக்குவட்டை கிராமம் கோவையிலிருந்து மன்னார்காடு (கேரளா) செல்லும் வழியில் 70 கிமீ தாவளத்தை அடுத்து வலது புறம் அருகே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் பழங்குடி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் சுமார் 500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை 50 எச்.பி. மோட்டார் பம்ப் செட் மூலம் எடுத்து குழாய்கள் வழியே கொண்டு சென்று கொடுக்க திட்டம் செய்துள்ளதாம் கேரள அரசு. இதேபோல் இந்த தடுப்பணைக்கு முன்னும் பின்னும் பவானி ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் உடனடியாக தடுப்பணை கட்டி அங்குள்ள கிராமங்களுக்கும் இதேபோல் பம்ப் செட் மூலம் தண்ணீர் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அதில், முதல் தடுப்பணையாக இது உருவாக உள்ளதாக இப்பகுதி பழங்குடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ‘ஏற்கனவே நாங்கள் இங்கே பம்ப் செட் வைத்து தண்ணீர் எடுத்து வருகிறோம். குடி தண்ணீருக்கும் பிரச்சினை உள்ளது. அதை தீர்க்கும் முகமாகவே இந்த தடுப்பணையை கட்ட ஆரம்பித்துள்ளது அரசு. இதன் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வராமல் போகாது என்பதே எங்கள் நம்பிக்கை’ என்றார் இப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி இளைஞர் ஒருவர்.

ஏற்கனவே பவானி வறண்டு கொண்டிருக்கிறது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் குடிநீர் ஆதாரங்கள் மோசமாகியுள்ளன. இந்த நிலையில் அட்டப்பாடியிலேயே அணைகட்டித்தடுக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்? என்பதே தமிழகத்தில் இதற்காக போராடுபவர்களின் கேள்வியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்