இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு; இடைத்தரகர் கைது

By ஆர்.ஷபிமுன்னா

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரின் பெயர் சுகேஷ் சந்திரசேகரா என்றும் அவரிடமிருந்து பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போலீஸில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்), சுகேஷ் சந்திரசேகரா மீது லஞ்சம் மற்றும் சதி குற்றச்சாட்டுகளும் டிடிவி.தினகரன் மீது லஞ்சப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.1.5 கோடி சிக்கியது:

டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில், சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் பிஎம்டபியூ, மெர்சிடீஸ் கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுகேஷுடன் சேர்த்து மேலும் சிலரை போலீஸார் தம் விசாரணை வளையத்தில் பிடித்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாக முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக அம்மா கட்சியின் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் ரூ.60 கோடி தர முன்வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவரிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் ரூ.1.5 கோடியை சுகேஷிடம் இருந்து போலீஸார் கைப்பற்றி உள்ளதாக கூறி உள்ளனர்.

இவர்களிடம் இருந்து மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிபிள்யூ ஆகிய சொகுசுக்கார்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு காரின் பதிவு எண் மீது ராஜஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிடபட்டுள்ளது. எனவே, தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள டெல்லியின் குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு தகவல் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினகரன் மறுப்பு:

இதற்கிடையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "டெல்லியில் கைதான நபர் யாரென்றே எனக்குத் தெரியாது. சின்னம் பெற வேண்டும் என்பதற்காக நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யாரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை நான் சட்டரீதியாக அணுகுவேன். இயக்கத்தை அழிப்பதற்காக யாரோ சிலர் செய்யும் சதி இது" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, "தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என யாரும் எனக்கு நெருக்கடி தரவில்லை. கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.

சின்னம் முடக்கம் பின்னணி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். பின்னர் அவர் முதல்வராக பதவியேற்க முயன்ற போது, கட்சியில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என இவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல, சசிகலா தரப்பிலும் இரட்டை சின்னம் கோரி மனு தரப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் யாருக்கும் இல்லை எனத் தெரிவித்தது. இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே இருதரப்பும் தேர்தலுக்கு ஆயத்தமான நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்தானது.

இந்நிலையில், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்