பெண் சிசுக் கொலைக்கு எதிராக பெசன்ட்நகர் கடற்கரையில் மணல் சிற்பம்- கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

பெசன்ட் நகர் கடற்கரையில் பெண் சிசுக் கொலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டிருந்த மணல்சிற்பங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

2011-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். குறைந்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘மகளைப் போற்றுதும்’ என்ற பிரச்சாரத்தை ஆக்‌ஷன் எய்ட் மற்றும் யூ ஆர்ட் என்ற அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆக்‌ஷன் எய்ட் அமைப்பைச் சேர்ந்த சத்தீஷ், யூ ஆர்ட் அமைப்பின் ஜேகப் மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, ஆசிய ஊடக கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் இணைந்து மணல்சிற்பங்களை உருவாக்கினர்.

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6.31 மணிக்கு சிற்பங்களை செய்து முடித்தனர். ஒரு பெண் படுத்திருப்பது போலவும் அருகில் சில சவக் குழிகள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள், பார்வையாளர்கள் மனதில் பல எண்ணங்களை ஏற்படுத்தின.

கடற்கரைக்கு வந்திருந்த இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி அர்விந்த் காஷிக் கூறுகையில், “மணலில் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்ணின் சிற்பம் உயிர்த்தெழுந்து முழுமையான வாழ்வை பெற இந்த சமூகம் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

ஆக்‌ஷன் எய்ட் திட்ட அலுவலர் பாபு கூறும்போது, “பெண்கள் இல்லாத உலகம், உழைப்பு சக்தியற்ற, உற்பத்தியற்ற உலகமாக இருக்கும். அப்படியொரு நிலைமை ஏற்படாமல் தடுக்க இந்த நிகழ்ச்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்” என கூறினார்.

“வளர்ந்த மாநிலங்களாக கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இதேபோன்று பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் 850-க்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கின்றன” என்று ஆக்‌ஷன் எய்ட் மண்டல மேலாளர் எஸ்தர் மரியசெல்வம் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் நந்தினி கூறுகையில், “நகரங்களில் பெண் கருக்கொலைகள், சிசுக்கொலைகள் நடப்பதில்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். வழக்கம்போல் சொற்பொழிவுகள் நடத்தாமல், இதுபோன்ற முயற்சிகள் நிறைய பேரை சென்றடையும்” என்றார்.

கல்லூரி மாணவர்களின் மவுன நாடகம், தப்பாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளார் சுகிதா, ஓவியர் ஏ.வி.இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்