எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருநாவுக்கரசர் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (எய்ம்ஸ்) தமிழகத்தில் அமைப்பதற்கு 2015-16 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் மத்தியக் குழு வருகை புரிந்து தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களை பார்வையிட்டது.

இதை உடனடியாக அமைக்க வேண்டுமென பிப்ரவரி 16, 2016 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளாதது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்நிலையில் தற்போது நிதிநிலை அறிக்கையில் மேலும் சில அறிவியல் கழகத்தை சில மாநிலங்களில் அமைக்கப் போவதாக பாஜக அரசு அறிவித்திருப்பது மிகுந்த கேலிக்குரியது.

வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசின் பாராமுகம்

தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாகவும், பயிரிட்ட நெற்பயிர்கள் கருகிய காரணத்தினாலும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டுமென முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். அதேபோல, 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடியும், வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடியும் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையின் அடிப்படையில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் அடிக்கடி மனம் திறந்து பேசுகிறேன் என்று வானொலியில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியது வெறும் ரூபாய் 1940 கோடி.

நாடு முழுவதும் ஏற்படுகிற வெள்ளப் பெருக்கு, வறட்சியினால் பாதிப்பு போன்றவற்றை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது. கடந்த 2016-17 இல் ரூ.8450 கோடி, 2017-18 இல் ரூ.10,000 கோடி. கடந்த ஆண்டில் வழங்கியதைவிட நடப்பு ஆண்டிற்கு ரூ.1550 கோடி தான் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு இந்தியாவில் பேரிடர் மேலாண்மையை மத்திய அரசு நிகழ்த்த முடியுமா ? தமிழகத்தின் கோரிக்கையை இந்த சொற்ப நிதியை வைத்துக் கொண்டு நிறைவேற்ற முடியுமா ? நிதிநிலைமை இப்படி இருக்கிறபோது தமிழக அரசு கேட்பதற்கும் மத்திய அரசு கொடுப்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பது ஏன் ? தேசிய பேரிடர் மேலாண்மையில் மத்திய - மாநில அரசுகள் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறதா ? இத்தகைய நாடகத்தின் மூலம் தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

சர்க்கரை மானியத்தை ரத்து செய்யும் மோடி அரசு

வரும் நிதியாண்டில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிற சர்க்கரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சர்க்கரையை சந்தை விலைக்கு வாங்கி, பொது விநியோக திட்டத்தின் மூலம் ஒரு கிலோ சர்க்கரையை ரூபாய் 13.50 க்கு விற்கிறது.

இதற்காக கடந்த கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலங்களுக்கு மானியமாக ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூபாய் 18.50 அளித்து வந்தது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 27 லட்சம் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 40 கோடி குடும்பத்தினர் பயனடைந்து வந்தனர். மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 4,500 கோடி நிதி ஒதுக்கியது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மானியங்களை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே மண்ணெண்ணெய் மானியத்தை ஒழிக்கிற வகையில் மாதத்திற்கு 10 பைசா விலையை உயர்த்திக் கொண்டு வருகிறது.

தற்போது உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை ரத்து செய்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொது விநியோகத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமைக்கு பதிலாக மானியமாக ரூபாயை நேரடி பயன்கள் மாற்று திட்டத்தின்கீழ் வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதன் முதற்கட்டமே சர்க்கரை மானியம் ரத்து. இத்தகைய மக்கள் விரோத போக்கை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

கடலில் எண்ணெய் கலப்பு

எண்ணூர் அருகே கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில், கடலில் 20 டன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதை அகற்ற முடியாமல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சில நாட்களாக திணறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இத்தகைய விபத்துகளை எதிர்கொள்வதற்கு எந்தவித தொழில்நுட்பமும் இல்லாமல் தொழிலாளர்களைக் கொண்டு அகற்றுகிற முயற்சி மிகுந்த ஏமாற்றத்தை தந்து வருகிறது.

இத்தகைய விபத்துகளை எதிர்கொள்வதற்கு உரிய தொழில்நுட்பத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டப்படி வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுக்கும் பாஜக அரசு

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடங்களை நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கி, இலவச கல்வி வழங்க வேண்டும். இதற்கான 2014-15 ஆம் ஆண்டுக்கான தொகையை மத்திய கல்வித்துறை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை ரூபாய் 300 கோடி தராவிட்டால் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வியமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்