இரட்டை ஆதாயம் தரும் பதவி விவகாரம்; புதுச்சேரி எம்எல்ஏக்கள் 8 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: 27-ல் ஆஜராக உத்தரவு

By செ.ஞானபிரகாஷ்

இரட்டை ஆதாயம் தரும் பதவி விவகாரத்தில் புதுச்சேரி எம்எல்ஏக்கள் 8 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 27-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா என 9 பேர் பதவி வகித்து வருகின்றனர். எஞ்சிய 6 பேரில் லட்சுமி நாராயணன் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளராகவும், மற்ற 5 எம்எல்ஏக்கள் புதுவை அரசின் வாரியத் தலைவர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆட்சிக்கு ஆதரவளிக்கும் திமுகவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது.

எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்களாக பதவியேற்றபோது இரட்டை ஆதாயம் பெறும் பதவி வகிப்பதாகப் புகார் எழுந்தது. இதனால் 8 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின.

கடந்த 12.7.2017 அன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஜனாதிபதியிடம் வாரியப் பதவி வகிக்கும் எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்தார். இந்த மனு மீது மத்திய தேர்தல் ஆணையம் கருத்துகளை அளிக்க ஜனாதிபதி கடந்த 4.9.2017 இல் உத்தரவிட்டார். இதையடுத்து தேர்தல் ஆணையம் 27.6.2018 இல் சம்பந்தப்பட்ட 8 எம்எல்ஏக்களுக்கும் மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக 8 எம்எல்ஏக்களும் தங்கள் விளக்கத்தை கடந்த 12.7.2018 அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து 4.9.2018ல் 8 எம்எல்ஏக்களுக்கும் தேர்தல் ஆணையம் மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசில், 12.7.2018ல் எம்எல்ஏக்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதோடு ஜனாதிபதி கேட்டிருக்கும் விளக்கத்துக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது.

ஜனாதிபதி கேட்டுள்ள விளக்கத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உள்ள கருத்துகளோடுதான் அவருக்கு திருப்பி அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட 8 எம்எல்ஏக்களும் 20.9.2018-க்குள் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கத்தை உறுதிமொழி பத்திரத்தில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. வருகிற 27-ம் தேதி தேர்தல் ஆணையம் முன்பு நேரிலோ, அல்லது சட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ ஆஜராக வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட 8 எம்எல்ஏக்கள் மீதும் எந்த முன்அறிவிப்புமின்றி தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் மனு செய்த முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் கூறியதாவது: “நான் அளித்த புகாரின் மீது அசல் மனுதாரர் என்ற முறையில் எனக்கு தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெரிவித்துள்ளது. அதில் 8 எம்எல்ஏக்கள் அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தகுந்த விளக்கத்தை 20.9.18-க்குள் அளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது. மேலும் 27.9.18ல் தேர்தல் ஆணையம் முன் நேரில் 8 எம்எல்ஏக்கள் அல்லது அவர்களின் சட்டப் பிரதிநிதிகள் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. இல்லையெனில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளது.

இதனால் கூடிய விரைவில் இரட்டை ஆதாயம் பெற்ற 8 எம்எல்ஏக்களும் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடமும் கலந்து பேசி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

39 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்