ஊழல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிடங்கு நீங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

"ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக் கிடக்கும்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்களை விமர்சிப்பதா? என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“விபத்தில் கிடைத்த “பதவியில் அமர்ந்து விட்டால் பத்தும் பேசலாம்“ என்ற கண்ணியமற்ற அவல மனப்பான்மை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதால் - ஊழல் பண மூட்டைகளின் மீது அமர்ந்துகொண்டு, அய்யன் திருவள்ளுவர் சிலை இருக்கும் கன்னியாகுமரியில் வாய்மை எதுவும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பிதற்றியிருக்கிறார்.

“கூவத்தூரில்" தொடங்கி, இன்றைக்கு "கோட்டையில்" அமர்ந்திருக்கும் வரை தினமும் பலகோடிகளைக் கொட்டிக் கொடுத்து அதைத் தன்னுடைய சம்பந்திக்கு தனது துறையிலேயே உள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றிப் பேசும் தார்மீகத் தகுதியை எப்போதோ இழந்து விட்டார்.

கோடி கோடியாய் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்த பதவி விரைவில் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மத்திய பா.ஜ.க.விற்கு "அடிமைச் சாசனம்" எழுதிக்கொடுத்து விட்டு ஆட்சியில் நீடிக்கும் முதல்வர் என் மீது பாய்ந்திருப்பது, தன்னை நோக்கி அணி வகுத்து வந்து கொண்டிருக்கும் இனியும் வரப்போகும் ஊழல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்ற அச்சத்தின் விளைவே.

கட்சிக்குப் பொதுச் செயலாளரும் இல்லாமல், புதிய கட்சி விதிகளை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி அமர்ந்து, அந்த விதிகளும் தேர்தல் ஆணையத்தின் முன்பும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்பும் உள்ள விசாரணையால் "தொங்கலில்" நிற்கும் ஏமாற்றத்தில், ஆதங்கத்தில் "உள்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை" என்று கேட்கும் அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி சிறிதும் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் பேசியிருப்பது அங்கே நடைபெற்ற அரசு விழா என்கிற தரத்தை அப்படியே சாக்கடையில் இறக்கியிருப்பதற்குச் சமமாகும்.

திமுகத் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து, நூற்றுக்கு நூறு சதவீதம் "கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்த" பழனிசாமி கூக்குரலிடுவது வெந்துகொண்டிருக்கும் பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல, எடப்பாடி பழனிசாமி உண்மையில் கொல்லைப்புற வழியாக அதிமுகவை கைப்பற்றியவர்.

கொல்லைப்புற வழியாக ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்தவர். கொல்லைப்புற வழியாக மறைந்த ஜெயலலிதாவிற்கு அளித்த வாக்குகளை வைத்து, இன்றுவரை ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட வழக்கு இன்னும் டெல்லி நீதிமன்றத்திலும் அலை பாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலே, "கொல்லைப்புறமாக" ஆட்சிக்கும், கட்சிக்கும் வந்து இன்றைக்கு நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளில் எடப்பாடி பழனிசாமி அலையாய் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலேயே "ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதலமைச்சரைப் பெற்ற கட்சி" அ.தி.மு.க - அதுவும் நாட்டின் உச்சநீதிமன்றத்தால் ஊழலுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொதுச் செயலாளரைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. அண்டை மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் ஊழலுக்காக சிறை வைக்கப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. இன்றைக்கு தனது சம்பந்திக்கே ஒப்பந்தங்களை கொடுத்து ஊழல் செய்யும் ஒரு முதலமைச்சரைக் கொண்ட ஆட்சி அ.தி.மு.க ஆட்சி.

அது மட்டுமின்றி தனது அமைச்சரவை சகாக்களையும் அவரவர் உறவினர்களுக்கும், சகோதரர்களுக்கும் ஒப்பந்தங்களைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக போட்டிபோட்டுக்கொண்டு ஊழல் செய்வதைப் பார்த்து ரசிக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே தேடித் தேடி கண்டுபிடித்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்தும், தி.மு.க.வைப் பார்த்தும் ஊழல் என்று கடைந்தெடுத்த "பொய்யுரை" நிகழ்த்துவது அரசு கஜானாவில் அடிக்கும் கொள்ளைப் பணத்தின் தழும்பேறிய ஆணவமே தவிர வேறு ஏதுமில்லை.

மாநில மக்களின் நலனுக்காக நேர்மையான ஆட்சியை வழங்குவதிலோ, திறமையான நிர்வாகத்தை அளிப்பதிலோ, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டி அதைப் போற்றிப் பாதுகாப்பதிலோ திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது திமுக ஆட்சியையோ, எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் அதிமுக வின் பிளவுபட்ட பிரிவால் ஏணி வைத்து கூட எட்டிப் பார்க்க முடியாது என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

அணி வகுத்து வரும் ஊழல் வழக்குகளே அவருக்கு அதை விரைவில் எளிதில் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. ஆகவே, அதிமுக விற்குள் ஒரு பிரிவை கைப்பற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றியோ, உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும் நல்லது அவருடைய பிரிவுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்