கந்து வட்டி வசூலித்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`கந்து வட்டி கும்பல் பிடியில் திணறும் திருப்பூர்’ என்ற தலைப்பில் `தி இந்து’ தமிழ் நாளேட்டில் கடந்த 23.9.2013 அன்று ஒரு செய்தி வெளியானது. கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொள்வதாக செய்தியில் கூறப்பட்டிருந்தது.

`தி இந்து’ நாளிதழ் செய்தியையே பொது நல மனுவாகக் கருதி கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து உயர் நீதிமன்ற உதவிப் பதிவாளர் (ரிட் பிரிவு) ஒரு மனு தாக்கல் செய்தார்.

“கடந்த 2003-ம் ஆண்டின் தமிழ்நாடு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த மாநில உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி யோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்த 2003-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப் பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.முத்துகுமாரசாமி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

“கந்து வட்டி கொடுமைகளைத் தடுப்பதற்கான 2003-ம் ஆண்டின் கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அந்தச் சட்டத்தில் உள்ள விதிகள் பற்றி அனைத்து ஊடகங்களிலும் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

அதேபோல் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகார்களை பதிவு செய்யாமல், பல நேரங்களில் கந்து வட்டி வசூலிப்போர் தரும் புகார்கள் தான் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே கந்து வட்டியால் பாதிக்கப்படுவோர் அளிக்கும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கமிட்டிகளை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தார்.

அவரது இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெறலாம்.

மேலும், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், “இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர் பான அறிக்கையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்