ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்: வேல்முருகன் ஆதரவு

By செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "பிறப்பிலேயே மனிதரை மேல், கீழ் எனப் பிரிக்கிறது சனாதனம்; அருவருப்பான இந்த இழிசெயல் இயற்கைக்கே முரணானது, மானுடத்திற்கு எதிரானது; எனவே மன்னிக்கவே முடியாதது.

ஆனால் குற்றமெனத் தெரிந்தே இதனைச் சித்தாந்தம் என்கிறது பாஜக. சூழ்ச்சி, சதி, மோசடியால் அதைச் செயல்படுத்தவும் செய்கிறது. இத்தகைய பாஜக, நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, 'தமிழ் - தமிழர் - தமிழ்நாடு' என்ற வரலாற்று நிகழ்வையே அப்புறப்படுத்தப் பார்க்கிறது. அதற்காக அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன், நீட், சாஹர் மாலா, பாரத் மாலா, ஹைட்ரோகார்பன் என பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது; இப்படியாக, தமிழ்த் தேசிய தன்னுரிமையைப் பறிக்கிறது.

தமிழகத்தைப் பாழ்நிலமாக்கவும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கவும் அண்மையில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தா, ரிலையன்ஸ் அம்பானி ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது மோடி அரசு. அதனை அரசு நிறுவனமான ஓஎன்ஜிசியின் ஒத்துழைப்பிலேயே செயல்படுத்தவும் உதவுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை முழுவதிலும் கடலிலும் நிலத்திலும் அமையும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இவை. புவி அன்னையின் அடிமடியிலேயே கைவைக்கும் இந்தக் கார்ப்பரேட் பயங்கரவாதத்தால் நீர்வளம், நிலவளம் அழியும்; இயற்கையும் சுற்றுச்சூழலும் மடியும்.

இதனை எதிர்த்து, மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவித்திருக்கிறது 'பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்!'. வரும் 23 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கிறது இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவராகிய நான் கடலூரில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன்.

தமிழக மக்கள் பெருந்திரளாக இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறோம். ஜனநாயக முறையிலான இந்த அறவழிப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்து, சட்டத்துக்குப் புறம்பாக அழிம்பு செய்தது முதல்வர் பழனிசாமியின் அதிமுக அரசு. இது சனாதன பாஜகவுக்கு அடிப்பொடி வேலை செய்ததாகும். அதனை நீதிமன்றம் சென்று முறையிட்டே, இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 'தமிழ் - தமிழர் -  தமிழ்நாடு' வரலாற்று நிகழ்வை அப்புறப்படுத்தும் பாஜகவின் திட்டத்திற்கு அதிமுக அரசு ஒத்துழைப்பது தெரிகிறது. இந்த இரண்டகத்தை அது கைவிட வேண்டும்; புதுச்சேரி முதல்வர் அங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததை தமிழக அரசு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு வேல்முருகன்  தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்