தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரைதான் காவிரி மேலாண்மை ஆணையமா?- வேல்முருகன் கேள்வி

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரைதான் காவிரி மேலாண்மை ஆணையமா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்திற்கான நீரை விடுவிக்காமல் பிரச்சனையை மிக எளிதாகக் கடந்துபோவதைப் பார்த்தால், தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரைதான் காவிரி மேலாண்மை ஆணையமா என்ற கேள்வி எழுகிறது.

 

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் 2014-ன் மத்தியில் பாஜக மோடி ஆட்சி ஏற்பட்டதிலிருந்து, ஜூன் 12-ம் தேதி அணைத் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. காரணம், தமிழகத்திற்கு காவிரி உரிமையை மறுக்கும் நோக்கம்தான்.

 

அந்த நோக்கம் உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது. அதாவது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல், காவிரி மேலாண்மை “ஆணையம்” மற்றும் ஒழுங்காற்றுக் குழு தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டது.

2018 மே 18-ல் அளிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டும், ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; அதற்குப் பிறகும்கூட அந்த ஆண்டில் நீர் எதுவும் விடுவிக்கப்படவில்லை.

 

சரி, இந்த ஆண்டு ஜூன் 12-ல் அணை திறக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் இதற்காக ஜூன் 7-ம் தேதியே காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடியதாகவும், அப்போது கர்நாடகத் தரப்பு, ''மழையில்லை, அதனால் தண்ணீர் இல்லை'' என்று சொன்னதாகவும், அதனால் வரும் 24-ம் தேதியன்று மீண்டும் கூடிப் பேச இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால், தமிழகத்திற்கான நீரை விடுவிக்காமல், பிரச்சனையை மிக எளிதாகக் கடந்து செல்வதே அங்கு நடந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்ச நீதிமன்றத் துணையுடன் காவிரி மேலாண்மை “ஆணையம்” அமைத்தது, தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரையாகவே படுகிறது.

ஏன் இந்த முடிவுரை என்பது வெளிப்படை. அது, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்னும் அடையாளத்தை அழிப்பதே; தமிழ்நிலத்தைப் பாலைவனமாக்கி, அணுவுலை, அணுக்கழிவு மையம், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் ஆகியவற்றிற்காக மட்டும் பயன்படுத்துவதே!

 

இதில் நம் கண்ணை நம் கையைக் கொண்டே குத்தவைத்திருக்கிறார் மோடி. ஆம், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசைக் கொண்டே இந்த வேலைகளைச் செய்கிறார்.

 

காவிரிப் பிரச்சனை நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியபோது, அப்போதைய பிரிட்டன் அரசு உடனடியாகவும் மிக எளிதாகவும் அதற்குத் தீர்வு கண்டது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15-ல் இந்திய அரசு ஏற்பட்டதும், மீண்டும் அதைப் பிரச்சனைக்குள்ளாக்கியது. கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவுமே பிரச்சனையைக் கொண்டுசென்று இப்போது மோடியால் முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது.

தான் எழுதிய இந்த முடிவுரையை மத்திய அரசே கிழித்தெறிந்துவிட்டு, பாரபட்சமின்றி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்; இல்லாவிட்டால், மத்திய அரசைத் தவிர்த்து, நேரடியாகவே கர்நாடகாவுடன் வழக்காடும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்படக்கூடும். இந்த நிலை உருவாகாமல் தவிர்ப்பதுதான் மத்திய அரசின் பொறுப்பும் கடமையுமாகும்.

இப்படித்தான் தமிழர்கள் உணர்கிறார்கள்; மத்திய அரசு உணருமா என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்வி'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்