முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு; நடந்தது என்ன?- ஸ்டாலின் பேட்டி

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த திமுக - அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவையைக் கூட்டி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியதாக ஸ்டாலின் கூறினார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்றைய தினம் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்டு, 'முதல்வர் தங்களோடு பேசுவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார், காலை 10:30 மணியளவில் வர முடியுமா?' என்று கேட்டனர். அவர்களிடத்தில், 'இன்று பல்வேறு பணிகள் இருப்பதாலும், காவிரி விவகாரம் குறித்த முழு விவரங்களை அறிந்து வைத்திருக்கின்ற எங்களுடைய எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் இன்று ஊரில் இல்லை, எனவே, அவர் சென்னை வந்தவுடன், நாளை வருகிறோம்' என்றும் தெரிவித்தேன். அதன்படி, இன்று காலை பத்தரை மணியளவில் வந்து சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்த அழைப்பை ஏற்று, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும், எங்களுடைய துணைத் தலைவரும் தமிழக முதல்வரை சந்தித்தோம்.

முதல்வர் எங்களை அழைத்துப் பேசுகையில், 'பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள், என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?' என்று கேட்டார். நான் கேட்க விரும்புவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்றால் சந்திக்கிறார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றால் சந்திக்கிறார். அதுமட்டுமல்ல, யார் யாரையோ தனித்தனியாக சந்திக்கின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையில், குறிப்பாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமர் சந்திக்க மறுப்பது, எங்களுக்கு மட்டும் கிடைத்த அவமானமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என்பதை நான் மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, 'என்ன செய்யலாம்?' என்று முதல்வர் கேட்டதும், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, பிரதமரை சந்திப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றலாம், என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, 'திங்கட்கிழமை பொறுத்துப் பார்க்கலாம், அன்றைக்கு புதிய செய்தி வர வாய்ப்பிருக்கிறது, அப்படியொரு தகவலும் வந்திருக்கிறது. அப்படி வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 8-ம் தேதியன்று சட்டப்பேரவையைக் கூட்டுகிறோம்' என்ற உறுதியை முதல்வர் எங்களிடத்தில் வழங்கியிருக்கிறார்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்கவும், காவிரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் மறுத்தால், சட்டமன்றத்தைக் கூட்டுகின்ற செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் இருக்கின்ற 50 எம்.பி.க்கள், திமுக சார்பில் இருக்கின்ற 4 எம்.பி.க்கள், அத்தனை பேரும் ராஜினாமா செய்வோம், என்றும் அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, எதிர்வரும் 8-ம் தேதியன்று சட்டப்பேரவை கூடும்போது, இதையொட்டி மேலும் பல கருத்துகளை நாங்கள் முன்வைப்போம்.

எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதற்கு அரசு ஒப்புகொள்ளுமா என்பதை அதிமுகவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எங்களைப் பொருத்தவரையில், திமுக சார்பில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்.

பாஜகவின் சார்பில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவரை சந்திக்குமாறு பிரதமர் சொல்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது. எனவே, தமிழக விவசாயிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் இன்றைக்கு மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது. எனவே, அனைத்து கட்சிகளின் தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுவதை ஆரோக்கியமா, இல்லையா என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. எங்களைப் பொருத்தவரையில், காவிரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக எந்தளவுக்கும் இறங்கி வருவதற்கு தயாராக இருக்கிறோம். அதனடிப்படையில், இன்றைக்கு முதல்வர் அழைத்தபோது கூட, உடனே வந்து எங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கிறோம்.

காவிரி விவகாரத்தில் பிரதமர் தயக்கம் காட்டுவதற்கு, கர்நாடக மாநில தேர்தல் ஆதாயம் தான் காரணம் என்று கருதுகிறோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்