சசிகலா புஷ்பாவுடன் திருமணம்: ராமசாமிக்கு மதுரை நீதிமன்றம் தடை:

By செய்திப்பிரிவு

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அவரது சட்ட ஆலோசகர் ராமசாமி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும், அவரது சட்ட ஆலோசகராக பணிபுரியும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதுதொடர்பான திருமண அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பரவியது.

இந்நிலையில், மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், தனக்கும் ராமசாமிக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு ரிதுசனா என்ற ஒரு வயது குழந்தை இருப்பதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தன் கணவர் ராமசாமி திருமணமான முதலே தனக்கு வரதட்சணைக் கொடுமை அளித்து வந்ததாகவும், இந்நிலையில் அவருக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், ராமசாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ராமசாமி மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, சத்யப்பிரியா மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில்,

”எனக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு ராமசாமி வரதட்சணை கொடுமை செய்தார். இந்நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

என்னுடன் நடைபெற்ற திருமணம் செல்லத்தக்கதாக உள்ள நிலையில், இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது சட்ட விரோதம். எனவே அவர் வேறொரு திருமணம் செய்துகொள்ள தடை விதிக்க வேண்டும்”

என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேங்கட வரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமசாமி தரப்பில் சத்யப்பிரியாவுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும், அதை மறைத்து ராமசாமியை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு சத்யப்பிரியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் முடிவு பெற்ற நிலையில், இந்த வழக்கில் முடிவு எட்டும் வரை ராமசாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்