கோயில் நிலம் அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரிக்கு நிபந்தனை ஜாமீன்

By செய்திப்பிரிவு

கோயில் நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தார். மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அழகிரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்தாக, மு.க அழகிரி உள்ளிட்டவர்கள் மீது கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மு.க அழகிரி, சம்பத்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார், கோயில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மு.க.அழகிரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனு ஆகஸ்ட். 28-ல் விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரிக்கு செப். 3 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன் அழகிரி சரணடைய வேண்டும். அவருக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். அழகிரி ஜாமீன் கோரலாம் என உத்தரவிட்டார்.

இந்த இடைக்கால ஜாமீன் உத்தரவின் அடிப்படையில் மு.க.அழகிரி, மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தா.திரிவேணி முன் செவ்வாய்க்கிழமை காலை சரண் அடைந்தார். அவருக்கு பார்த்திபன், பிச்சை ஆகியோர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கினர்.

இதையடுத்து, அழகிரிக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரது வழக்கறிஞர் எஸ்.மோகன்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று, மறு உத்தரவு வரும் வரை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழகிரிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால முன் ஜாமீன் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அவரது முன் ஜாமீன் மனு புதன் கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக மு.க.அழகிரி புதன் கிழமை காலை 10.20க்கு நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிமன்றப் பணி துவங்கும் வரை காரில் காத்திருந்தார். அவரது வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். 15 நிமிடங்களில் விசாரணை முடிந்து வெளியேறினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க அழகிரி மறுத்துவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்