அச்சுறுத்தும் சிறுத்தைகள்!- கூண்டுவைத்து காத்திருக்கும் வனத் துறை

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தைகளின் தொடர் ஊடுருவலால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் கிராம மக்கள். ஊருக்குள் நுழைந்து, கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தைகளைப் பிடிக்க கூண்டுவைத்துக்  காத்திருக்கின்றனர் வனத் துறையினர்.

வாழ்விடங்கள் பறிபோனதாலும், வனத்துக்குள் உணவும், தண்ணீரும் கிடைக்காததாலும் ஊருக்குள் நுழைகின்றன வன விலங்குகள். இதனால், மனித-விலங்கு மோதல் அதிகரிக்கிறது.

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது தோலம்பாளையம் கிராமம். வாழை, தென்னை, கரும்பு, காய்கறிகள் என விவசாயமே பிரதான வாழ்வாதாரமாக உள்ள இக்கிராமத்தில், கடந்த சில மாதங்களாக தொடரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கிராமத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட மலைக்காட்டில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து,  அங்குள்ள ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களைக் கொன்று திண்கின்றன. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களில்கூட வாழைத்  தோட்டங்களுக்குள் சிறுத்தைகள் நடமாடுவதைப்  பார்த்த மக்கள் அச்சத்துக்குள்ளாகி, தங்களது விவசாயத்  தோட்டங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

இது தொடர்பாக வனத் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தோலம்பாளையம் கிராமத்தில்  சில மாதங்களுக்கு முன்பு கூண்டுவைக்கப்பட்டு,  அதில் ஒரு சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை சத்தியமங்கலம் வனப் பகுதியில் கொண்டுசென்று விட்டனர். இதனால், இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், மீண்டும் சிறுத்தைகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன.

நாய்களின் மாமிசம் சிறுத்தைகளுக்குப் பிடித்து விட்டதால், தோட்டப் பாதுகாப்புக்கு வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமின்றி, தெரு நாய்கள்,  ஆடுகள், கன்றுக்குட்டிகள் என வரிசையாக கொன்று வருவதாக தெரிவிக்கும் ஊர் மக்கள், சிறுத்தைகளின் தொடர் ஊடுருவலால் தங்களது விவசாயப் பணிகளை தொடர இயலவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது மீண்டும் வனத் துறை சார்பில்,  சிறுத்தையைப் பிடிக்க கூண்டுவைக்கப்பட்டு, அதில் ஒரு  நாயைக் கட்டிவைத்துள்ளனர். நாயை சாப்பிட வரும் சிறுத்தை, கூண்டுக்குள் சிக்கும் என்று  எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் வனத் துறையினர். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தோலம்பாளையம் கிராமத்தில் சுற்றித் திரியும் சிறுத்தை, தனது குட்டிகளுடன் உலா வருவது, இங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தாய் சிறுத்தை கூண்டுக்குள் சிக்கும்போது, அதன் குட்டிகள் காயமடைந்துவிடக் கூடாது என்பதால்,  சிறுத்தைகளைப் பிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சுற்றுலா

41 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்